இது அம்மாவின் அரசா…?
கமல்ஹாசன் கேள்வி…!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால் சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில் அரசு திறந்துவிட்டுள்ள மதுக்கடை கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார்.
மதுக்கடைகளை திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் அம்மாவின் அரசா? என்றும் தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் இது அவமானமல்லாவா என வினவியுள்ளார் கமல். கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம் என்றும், கொள்ளை நோய் பரவும் சூழலில் தாங்குமா தமிழகம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உண்மையில் இது யாருக்கான அரசு என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை எனவும், ஒரு வேளை இருந்தால் அதை தொட்டுச்செல்லுங்கள் இல்லையென்றால் மேலிடத்தை கேட்டுச்சொல்லுங்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுக்கடைகளைக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இன்று கருப்புச்சின்னம் அணிந்து போராட்டம் நடத்திய நிலையில் கமல் காட்டமான அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
