சில பேர் மேல் மட்டும்தான் அவங்க டிராக் மாறி போகும்போது ரொம்ப உரிமையா திட்ட முடியும் அப்படி அதிகமாக சோசியல் மீடியாவில் திட்டப்பட்டவர் ஜீவி பிரகாஷ் .
இசையை விட்டு அவர் நடிப்புக்கு போனது நிறைய பேரால் ஏத்துக்கவே முடியல ,ஏனெனில் ஜிவியின் இசை ஆளுமை அவரின் வயசுக்கு மீறிய வளர்ச்சி அதை முழுசா அனுபவிக்காமல் போய்ட கூடாது என்ற ரசிகர்களின் ஏக்கம்தான் வசை சொல்லாக மாறியது .
தனது மாமா ரகுமானின் இசையில் “ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலே கலக்குது பாரு ஸ்டைலே’ என்ற பாடலை தொடங்கி வைக்கும் பாடகராக அறிமுகம் ஆனவர்தான், ஜீ. வி. பிரகாஷ் இசை குடும்பத்தில் வந்ததால் என்னவோ ரொம்ப சின்ன வயதிலயே திரை இசைக்கு வந்து விட்டார் .
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-யின் அந்நியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்களில் இசையமைப்பாளரின் உதவியாளராக பணியாற்றிய அவர் அந்நியன் படத்தில் காதல் யானை வருகிறது ரெமோ பாடலையும் பாடினார்.
அந்நியன் படத்தின்போதே சங்கரால் கவனிக்கப்பட்டு அடுத்து அவர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமாகினார்.
வெயில் படம் தமிழ் சினிமாவில் ரொம்ப முக்கியமான படம் கமர்ஷியல் வெற்றியுடன் வித்தியாசமான கதைக்களத்தில் வந்து தேசிய விருது , ஃபிலிம் ஃபேர் விருது ,தமிழக அரசின் விருது என பல விருதுகளை குவித்தது.
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் “வெயிலோடு உறவாடி “மற்றும் “உருகுதே உருகுதே” பாடல்கள் படத்தை டாக் ஆப் தி டவுனாக மாற்றியது . டெபுட் மேட்ச் சதம் போல ஜிவியின் முதல் படமே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
உருகுதே உருகுதே பாடல் பதிவு பற்றி வசந்தபாலன் கூறியது “ராஜாவின் ஓ பாப்பா லாலி பாடல் மாதிரி சோகம் , காதல் ,காமம் சேர்ந்த கலவையில் ஒரா பாடல் வேண்டும் என்று கேட்க சங்கரின் கடற்கரையோர பங்களாவிற்கு நண்பகல் சென்று நடு இரவில் உண்ணாமல் ஜீவி டியூன் செய்து கொண்டிருந்தாராம் . நள்ளிரவு தாண்டிய தருணத்தில் ஜீவி அழைக்கவே அரைத் தூக்கத்தில் சென்ற வசந்தபாலன் கேட்ட இசை அவரை திக்குமுக்காட வைத்தது .ஒரு பதினேழு வயசுப் பையனின் கைகளில் இருந்து பிறந்த இசையா இது என நெகிழ்வாக ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வெயில் வந்த அடுத்த வருடமே கீரிடமும் ,பொல்லாதவன் படப் பாடல்களும் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக வருகின்றன. கீரிடம் படத்தில் அக்கம் பக்கம் பாடலின் ஹிட் பற்றி தனியாகவே கட்டுரை எழுதலாம்.அந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் குறிப்பாக எனக்கு அந்த படத்தில் வரும் கண்ணீர் துளியே பாடல் மிகவும் பிடித்தமான பாடல் .
கீரிடம் படத்திற்கு பின் ஏஎல் விஜய் – ஜீவி காம்போ தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய வெற்றி கூட்டணியாக மாறியது .
கீரிடம் , மதராசப்பட்டினம் , தெய்வத்திருமகள் , தாண்டவம் , சைவம் ,தலைவா என அனைத்து ஆல்பங்களும் ஹிட் . இதில் சைவம் பட பாடல் ஒன்று தேசிய விருதும் பெற்றது .
ஜீவியின் வாழ்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் படம் ஒரு மைல்கல் . இந்த மாதிரியான கதைக்களங்களுக்கு அதிகம் அனுபவம் உள்ள இசையமைப்பாளர்கள் இசையமைக்கவே சிறிது கடினமாக இருக்கும் ஆனால் இளம் வயதில் அந்த வேலையை கன கச்சிதமாக செய்தார் ஜீவி . தாய் தின்ற மண்ணே பாடல் ஆகட்டும் , உன் மேல ஆசைதான் பாடல் ஆகட்டும் ,மாலை நேரம் பாடல் ஆகட்டும் ஆல்பம் முழுவதும் அனைத்து வகையான பாடல்களையும் தந்து அசத்தி இருப்பார் ஜீவி . பாடல்களை தாண்டி ஒரு இசையமைப்பாளர் ஜெயிப்பது எப்போது என்றால் படத்தின் பிண்ணனி இசை சிறப்பாக வரும்போது ஜீவியின் பிண்ணனி இசை பெரிதாக பேசப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபனின் தொடக்க காட்சி , நடராஜர் நிழல் விழும் காட்சி , கார்த்தி சோழனாக அறியப்படும் காட்சி என அனைத்து காட்சிகளிலும் தனி ஆவர்த்தனம் பண்ணி இருந்தார் ஜீவி பிரகாஷ் .
செல்வா காம்போவில் அடுத்த படமான மயக்கம் என்ன படமும் ஜீவியின் தனி முத்திரை முழு ஆல்பமும் ஹிட் , எல்லா பாடலும் ஹிட் என்பதை தாண்டி ஒவ்வொரு பாடல் அமைப்பில் அவர் காட்டிய வித்தியாசங்கள்தான் ஜீவியின் இசை ஞானத்தை அறிய வைத்தது . பிறைதேடும் உயிரிலே பாட்டு அமைத்தவர்தான் ஓட ஓட பாட்டையும் அமைத்தவர் என்பது ஆச்சரியமான ஒன்று .
முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் அந்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும் கண்கள் நீயே பாடலின் தாக்கம் ரொம்ப பெரிது எத்தனையோ அம்மா பாடல்கள் வந்து இருந்தாலும் இனி வர இருந்தாலும் இசைக்கோர்ப்பிலும் சரி , வரிகளிலும் சரி அந்த பாடல் தனக்கென ஒரு இடத்தை என்றும் பெற்று இருக்கும்.
ரொம்ப இளம் வயதில் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமை ஜீவிக்கு உள்ளது .
ஷூட்டிங்ல நான் உட்கார்ந்திருக்கேன், ஒரு சின்னப்பையன் எங்கிட்ட வந்து நின்னுகிட்டிருக்கான், இந்தப்பயைன் ரொம்ப நேரமா இங்கயே நிக்கிறானே யாரும் அவனை இங்கிருந்து போகச் சொல்லமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சுகிட்டு உட்கார்ந்திருக்கேன், அப்புறம் டீம் வந்து இவர்தான் நம்ம படத்துக்கு மியூசிக் டைரக்டர்னு சொன்னாங்க, எனக்கு ஆச்சரியம், இவ்வளவு சின்னவயசுல இவ்வளவு பெரிய உயரத்தை அடைஞ்சிருக்கார் வாழ்த்துகள் என்று குசேலன் பாடல் வெளியீட்டுவிழாவில் ரஜினி இவரை பற்றி சொன்னது அவரின் வளர்ச்சியை காட்டுகிறது.
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் வர்ததக வெற்றி ஜீவிக்கு பல பட வாய்ப்புகளை கொட்டி குவித்தது . ஏன் இந்த ஆள் நடிக்கிறான் என்று வெளிப்படையாக விமர்சனம் வைத்தவர்கள் நிறைய . வாரத்திற்கு ஒரு படம் வெளியிடும் அளவிற்கு பிஸியான நடிகராகவே டிராக்கை மாற்றினார் ஜீவி .
நடிப்பிலும் நாச்சியார் , சர்வம் தாள மயம் என இரு படங்களில் ஸ்கோர் செய்துவிட்டார் . தனது முன்னோடிகளான இளையராஜா ,ரகுமானின் இசையிலும் நடித்து விட்டார் ஜீவி பிரகாஷ் . இனிமேலாவது இசையின் மீது அவர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் எண்ணம்.
கடைசியாக வந்த அசுரன் படம் ஜீவியின் இசை வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய பாதையை போட்டுள்ளது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு ஜிவியின் பிண்ணனி இசையும் , எள்ளு வய பூக்களே,வா அசுரா பாடல்களும் மிக முக்கிய காரணம் …!
நடிப்பு , இசையை தாண்டி அவரின் சமூக அக்கறையும் இங்க பாராட்டப்பட வேண்டிய ஒன்று . டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஜீவி நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
சென்னை வெள்ளத்தின்போது தானாக முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தி பணத்தை அனுப்பினார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு கொடுத்ததுடன் , மத்திய அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.கஜா புயலால் டெல்டா மாவட்டம் பாதித்தபோது, அந்த மக்களுக்காக நேரடியாக களத்திற்கு சென்று நிவாரண உதவிகளை செய்தார்.
வெளிவர இருக்கும் சூரரை போற்று படம் அவரை மீண்டும் முழு நேர இசை பணிக்கு திருப்பும் என நம்பி காத்திருப்போம் …!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவிபிரகாஷ் …!
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments