தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கருதுவதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக 136 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, தமிழக அரசால் இரண்டே வாரத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்,
மிக சிறப்பான, அனைத்து வசதிகளுடன் எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக, இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாகவும், 57.89 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பரவல் குறைந்துள்ளது என்று கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இனி ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருக்காது என்றும் பழனிசாமி கூறினார்.