பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் பேருந்து சேவையை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் இன்று காலை முதல் பேருந்துசேவைகள் தொடங்கின. சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்துக்குள் 436 வழித்தடங்களில் 1683 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 7 மணி முதல் ஆந்திரத்தில் பேருந்து சேவைகள் தொடங்கின. இதற்காக நேற்று மாலை 4 மணி முதல் ஆன்லைன் மூலம் பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்துக் கழக துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதாப் கூறுகையில், பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம். பேருந்துக்குள் ஏறும்போது பயணிகள் தங்கள் கையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதும் கட்டாயமாக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
