தொண்ணூறுகள் ரகுமான் சிம்மாசனம் போட்டு ஜொலித்து கொண்டிருந்த தருணம் அச்சிம்மாசனத்தின் வைர கீரிடமாக வந்த படம்தான் ரிதம்…!
கேபியின் மாணவர் வசந்தின் இயக்கத்தில் ரகுமானின் இசையில் வைரமுத்தின் வரிகளில் “ஆக்சன் கிங்” இல்லை இந்த படத்தில் வெறும் அர்ஜுன், மீனா , ஜோ , ரமேஷ் அரவிந்த், நாகேஷ் , இலட்சுமி என குறைந்த கதாபாத்திரங்களோடு செதுக்கப்பட்ட ஒரு அழகிய ஹைக்கூதான் ரிதம்…!
கேபியின் மாணவர் என குறிப்பிட காரணம் படத்தின் வசனங்களில் இருக்கும் கேபியின் டச் …!
உதாரணத்திற்கு இந்த வசன உரையாடல் :
சித்ரா : அந்த ஆட்டோக்காரர் என்னை ஏதோ கை காமிச்சி சொன்னாரே… என்ன சொன்னாரு?
கார்த்திக்: ஒன்னும் இல்லங்க. .
சித்ரா: இல்ல நிச்சயமா ஏதோ சொன்னாரு! .
கார்த்திக் : சொன்னா உங்களுக்கு கோவம் வரும்.
சித்ரா: பரவாயில்ல.. சொல்லுங்க. .
கார்த்திக் : வேண்டாங்க எதுக்கு வம்பு! .
சித்ரா : சும்மா சொல்லுங்க..
கார்த்திக் : இல்ல ட்ரெயின் ஸ்ட்ரைக் அன்னிக்கு உங்களை ஆட்டோல கூப்பிட்டதுக்கு நீங்க வரல. ஏன் வரலன்னு கேட்டான். கண்ணகி பரம்பரையாயிருக்குமுன்னு சொன்னேன்.. இன்னைக்கு ஒரே ஆட்டோல வந்தோமா.. ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களான்னு சிரிச்சிகிட்டே கேட்டான்.
சித்ரா : அந்த ஆட்டோக்காரரை மறுபடியும் பாப்பீங்களா? .
கார்த்திக் : ஏன்?
சித்ரா : பாத்தா சொல்லுங்க.. உங்ககூட ஒரே ஆட்டோல வந்தாலும் நான் கண்ணகி பரம்பரைதான்.!!
இந்த உரையாடல் ஒன்று போதும் வசந்தின் எழுத்தின் அழகியலுக்கு …!
அடுத்து படத்தின் பாடல்கள் , ரகுமானிடம் கதை சொல்ல சென்ற வசந்த் முதலிலேயே சொல்லி விட்டாராம் ஐந்து பூதங்கள் பற்றி ஐந்து பாடல்கள் வேண்டும் என்று வைரமுத்துவும் அந்த பணியை சிறப்பாக தன் வரிகளால் உயிர் ஊட்டி இருந்தார்…!
நிலம் :
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
நெருப்பு :
தீ தான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
வானம் :
கலகலவெனப் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ, ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ..!
நீர் :
வெட்கம் வந்தால் உரையும்
விரல்கள் தொட்டால் உருகும
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ..!
இந்த பாடல் உலகின் உயரமான நீர்வீழ்ச்சியான நயாகாரவின் அருகில் அமர்ந்து எழுதப்பட்டது என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்..!
காற்று :
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்..!
இவ்வாறு ஒரு படத்தில் பாடல்களுக்கு என்று தனி கருத்தினை உருவாக்கி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்குவது என்பது உண்மையில் அத்துணை பேரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியே …!
அர்ஜுனின் அதிரடியை மட்டுமே பார்த்து பழகி போன ரசிகர்களுக்கு ரிதம் ஒரு அருமருந்து இன்று வரை அர்ஜுனின் ஆகச் சிறந்த நடிப்பு என்றால் அதில் ரிதம் நிச்சயமாக முதலில் இருக்கும்…!
படத்தின் கதை , வசனம் , பாடல்கள் , பிண்ணனி இசை, நடிகர்களின் தேர்வுகள் ,பாடல்களை கையாண்ட விதம் என அனைத்துமே ஒரு மாஸ்டர் பீஸ் ..!
இப் பட பாடல்கள் போல் தற்போது வருவதில்லை என்ற ஏக்கம் இருப்பதே இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ..!