தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் இயக்குனர் ஹரி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
