ஊருக்குள்ள சுத்தி திரிஞ்ச குருவி
பருந்தா மாறி உயர பறக்க ஆசைப்படும்
போது ஏற்கனவே ஆகாயத்தோட உச்சில
பறக்குற கழுகு கூட்டங்க அதை பார்த்துட்டு
சும்மாவா இருக்கும்,உயர பறக்க
நினைக்குற பருந்த அடிச்சு கீழ தள்ள தான்
பார்க்கும்,ஆனா அதையெல்லாம் மீறி
பருந்து மேல வந்து உயரத்துல பறந்துட்டா
..?
ஹ்ம்ம்..!!
வானம் யாருக்கும் ஜான் வச்சு முழம் போட்டு உங்க ஆளுங்களுக்கு இவ்வளோ அவங்க ஆளுங்களுக்கு இவ்வளோன்னு பிரிச்சு கொடுக்கல,உறியடி இயக்குநர் விஜய் குமார் அவர்கள் தான் இங்க வசனம் எழுதி இருக்கார்,ஒரு நேர்காணல்ல சொல்லுவார்,
என் தட்டுல மட்டும் சாப்பாடு இருந்தா பத்தாது என் பக்கத்து தட்டுல இருக்கவன் தட்டுலயும் சாப்பாடு இருக்கணும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் – ன்னு,அதை மனசுல வச்சுட்டு தான் டயலாக் எழுதிருக்காரு இந்த படத்துக்கும்,
வானம் ஒன்னும் அவங்க அப்பன் வீட்டு சொத்து இல்லன்னு அவர் எழுதின வசனத்துக்கு பின்னாடி அவருடைய நேர்காணல் தான் எனக்கு நினைவுக்கு வந்து செல்கிறது,ஸ்பாய்லர் செய்ய விரும்பவில்லை கதையை,
கண்ணிலே கலை வண்ணம் கொண்டார் ஒருவர் இவ்வூரில் இருக்குமானால் அதற்கு மாற்றுக்கருத்தின்றி என் வாயில் இருந்து வரும் பெயர் நவரசத்தை கண்ணில் நடித்து காமிக்கும் அன்பான ரசிகர்களை கொண்ட அகரத்தின் நாயகன் திரு.சூர்யா தான்,
வாரணம் ஆயிரத்திற்கு பிறகு திரும்பிய பக்கமெல்லாம் தன் நடிப்பிற்கு தீணி போடும் விதமாய் அமைந்த ஸ்கிரிப்ட்டில் படம் முழுக்க சூர்யா அவர்களின் நடிப்பு ஆதிக்கம்,தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தன்னை தவிர பிற நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்க நேரம் கொடுக்காமல் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தின் காட்சியாளனாக உருவெடுத்து அதில் ஓர் அர்ப்பணிப்பு வாழ்க்கை நடிப்பு வாயிலில் வாழ்ந்து, செய்யும் தொழிலுக்கும் உண்ணும் உணவிற்கும் விஸ்வாசமாய் படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கமாக நம் கண்களில் வைத்து பாதுகாப்பாக பொத்திக்கொள்ளும்படி உசுருக்கு சமமா நடிச்சு வச்சுருக்கார், அதுலயும் இங்க கீழ இமேஜ்ல குறிப்பிட்டு இருக்க ஐந்து ஃபிரேம்ல அவருக்கு நிகர் எவருமில்லை என ஆணி அடித்தார் போல் சொல்லி அடிக்குறார்,
எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல,அதனாலயோ என்னவோ ” பூ ராம் – ஊர்வசி ” தம்பதியினரின் அம்மா அப்பா கதாப்பாத்திரங்கள் என்னை ஏதோ செய்து விட்டது,ஏர்போர்ட் காட்சியில் சூர்யா அழும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது,படத்தின் இறுதி காட்சியிலும் கூட,என் கண்களில் இருந்து கண்ணீர் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வராது,கடைசியாக படத்திற்காக அழுதது நம்ம வீட்டு பிள்ளை கிளைமாக்ஸ் அப்பா இல்லாத வலியை சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சிக்கு தான்,நான் ஒரு கல் நெஞ்சக்காரன் என்று கூட சொல்லலாம்,கல்லுக்குள் ஈரம் என்று என்னையே அழ வச்சுட்ட பாத்தியா நீ நடிகன்யா யோவ் சூர்யா,அதுவும் ஒரு ரெண்டு நிமிஷம் Pause பண்ணி வச்சுட்டு எங்க அப்பா ஞாபகம் வந்து அதுவும் எங்க அப்பா இறந்து 19 வருஷம் கழிச்சும் எங்க அம்மா இறந்து 17 வருஷம் கழிச்சும் இன்னக்கி என்ன மொத்தமா அழ வச்சுட்ட,இதே மாதிரி அன்னக்கி எங்ககிட்ட காசு இருந்தா என்னோட அம்மா,அப்பா உயிரையும் காப்பாத்திருக்கலாமோ என்னவோ,அந்த வெறியில தான் இப்பவும் ஓடிட்டு இருக்கேன் அவங்க பேர காப்பாத்தணும்ன்னு,வலி,ஏமாற்றம்,இழப்பு,கவலை,மகிழ்ச்சி,பிரிவு,துயரம்,அழுகைன்னு எல்லாத்தையும் பத்து வயசுலயே பாத்துட்டேன் அப்பா இறந்தோன,எனக்கு ஒரு மோட்டிவேஷன இந்த படம் மூலமா இருந்ததுக்கு சாஷ்டாங்க சரண்டர் சூர்யா உங்ககிட்ட நான்,
சூர்யாவின் மனைவியாக வரும் அபர்ணா பாலமுரளி,மற்றும் காளி வெங்கட்,விவேக் பிரசன்னா,கருணாஸ்,அந்த பைலட் நண்பன் என அனைவரும் சூர்யாவின் நடிப்பு தீணிக்கு அவர்களது பங்கையும் சேர்த்து விருந்தளிக்கின்றனர்,இவர்களை கதைக்காக வெறுமன பயன்படுத்தாமல் நடிப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை திரையில் கொண்டு வந்த விதமும் மிக அருமை,
ஜி.வி.பி ஒரு இசை அரக்கன், ஆமா நடிப்புல கொஞ்சம் முன்ன பின்ன படங்கள் பண்ணாலும் இசைன்னு வந்துட்டா தன் ஆதிஜீவன்ல இருந்து தான் வாசிக்குற மெட்டுக்கு உயிர் கொடுக்குறதுல ஒரு இறை பாலன்,இங்கயும் அதை தான் செஞ்சுருக்கார்,நிகீத் பொம்மிரெட்டி என்பவரின் கேமரா ஒர்க்கில் ஒவ்வொரு ஃபிரேமும் ஸ்கிரீன்ஷாட் மெட்டீரியல் தான்,அதுவும் எங்க ஊரு மதுரை ஆனைமலைய இவ்வளோ அழகா யாரும் காமிச்சிட முடியாது,இந்த இசை சூரனையும் ஒளி வழி நாயகனையும் நாம் மனதளவில் போற்றியே ஆக வேண்டும்,
தவறாமல் பார்க்க வேண்டிய படம்,தவறுதலாக கூட பார்க்க மறக்காத படம் என ரசிகர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வேண்டும் என்று மெனக்கெடல் எடுத்து இந்த படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப் சுதா கொங்கரா அவர்கள் இக்கதையை எழுத்தாக எழுத ஆரம்பிக்கும் போதே பாசிடிவ் இன்டென்ட்டுடன் தொடங்கி இருக்கிறார்,
*
சூரரை போற்று – சூர்யாவின் நடிப்பு ஊற்று !
Finally, We Won Maara | We Won : ) 🔥😍😭❤️