Penbugs
Cinema

Rewind: City of God (கடவுளின் நகரம்) | Review

வழிப்பறியை வேலையாக செய்யும் அளவுக்கு வறுமையில் தள்ளப்பட்ட ஓர் கூட்டம், தங்களின் வாழ்வாதாரத்திற்கு, வயிற்று பிழைப்புக்கு அனுபவிக்கும் இன்னல்களையும், வன்முறையால் வார்க்கப்பட்ட அடுத்த தலைமுறையை சுமந்து கொண்டு வாழும் நகரத்தை பற்றிய கதையே – City of God (கடவுளின் நகரம்).

குரோதம், கொலைவெறி, காமம், துரோகம், என அயோகியத்தனத்தின் உருவமாக இருந்துகொண்டு தற்செயலான அதிகார வர்க்கத்தின் முகமாக மாறும் இரு இளைஞர்களின் செயல்கள் அவர்களை நேரடியாக சார்ந்தோரையும், மறைமுகமாக தொடர்புடையோரையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையெல்லாம் விரிவாக சித்தரித்துள்ளது இந்த படம். இதனிடயிலே அண்ணனின் நிலை தனக்கு வராமல் இருக்க, அடுத்த படிநிலைக்கு முற்படும் சாமானிய இளைஞனின் போராட்டமும், அவன் கண்ட கனவு வாழ்க்கை கைகூடியதா இல்லையா? என்பதை காட்டிய விதம் எல்லாம், காலவெள்ளத்தில் அடித்து செல்லாதவை. சக நிகழ்வுகளின் கோர்வையும், பல்வேறு பின்னல்களாக பின்னப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் கடைசி காட்சிகள், தலைமுறைகள் கடந்தாலும் தீரா பகைஉணர்வுகளை சுமக்கும் கதாபாத்திரங்களும், அந்த கதாபாத்திரங்களின் நிஜமனிதர்கள் பற்றிய உண்மைகளும், அடுக்கி வைக்க பட்ட ஆச்சர்யகுறிகளே!!!!

நிலவரைவியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு, வெளிவந்த சினிமாக்களில் ஆக சிறந்த ஓர் படமாக City Of God இருக்கும் என நான் நம்புகிறேன். உலகின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் அந்த நகரத்தின் வன்முறை வெறியாட்டமும், வறுமையின் வக்கிரமும் நாமிருக்கும் நகரத்தோடு ஒன்றிபோகவே செய்கிறது. இதில் உள்ள பலவகை ஆண் கதாபாத்திரங்களால் பாதிக்கப்படும் அனைத்து பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஓர் புள்ளியிலேயே நின்று நமக்கு உணர்த்துவது ஒன்றே தான் – இது ஆண் சமூகம்.

அந்த நகரத்தின் சிறார்களின் மூன்றாவது கையாகவே மாறிவிடுகிறது – துப்பாக்கிகள். அது தரும் சத்தங்கள் படத்தின் நாதமாகி விடுகின்றன. படம் நெடுக ரத்த வாடையும், அலறல் சத்தமும், கோபம் சுமக்கும் இரக்கமும் நம்முடனே இருக்கின்றன. பூஜ்யமாக இருக்கும் ஒருவன் பெரும்புள்ளி ஆவதும், பெரும்புள்ளி ஆக இருப்பவன் ஓர் இரவில் பிணமாக கிடப்பது என்று வாழ்வின் அனைத்து நிலையையும் காட்டி விடுகிறது – City of God இந்த படம் இந்திய துணைக்கண்டத்தில் எடுக்க பட்ட சில சிறந்த படங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. நரனாக இருக்கும் கூட்டத்திருந்து மனிதனாக மாற முயற்சிக்கும் சிறுவனின் மனநிலையும், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வன்முறையாளர்களால் விளையாட்டாக இழுக்கப்படும் பல சிறுவர்களின் களமே – City Of God.

கனவை நிறைவேற்றி அடுத்த கட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருபக்கமும், வன்மத்தின் அர்த்தம் தெரியாமல் வன்முறையாளர்கள் பின்னால் ஓடும் சிறுவன் ஒருபக்கம் என முடிகிறது படம். கலை என்பது அதிகாரத்தை கேள்வி கேட்பதாகவும், சமூகத்தின் கோரமுகத்தை கிழிப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்பார்கள். இதன் படி பார்த்தால் City Of God சிறந்த கலைப்படம்.

Related posts

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்!

Kesavan Madumathy

Sachin Tendulkar…

Penbugs

On this day, in 1990 Sachin Tendulkar went on to score his first century

Penbugs

Jan 4, 2004: Sachin’s masterclass innings of 241*

Penbugs

India has a complete bowling attack now: Sachin Tendulkar

Penbugs

He was 21 but looked 10; He was smashing us all over the park: Shane Warne’s 1st impression about Sachin

Penbugs

ECB announce Rachael Heyhoe-Flint trophy

Penbugs

Leave a Comment