Coronavirus Short Stories

சிட்டு..!

ஏய் “சிட்டு” விடிஞ்சு இன்னுமா தூக்கம்..?
சின்னச்சாமி தன் மகளை சத்தமாக அழைத்தார்..

அப்போவ்..நான் எப்பவோ எழுந்துட்டேன் என்று குரல் கொடுத்தாள் சிட்டு..!!

குட்டி ஆடு அவள் கைகளில் தவழ
வந்து நின்றாள்

“ஏண்டி அந்த குட்டிய கொஞ்ச நேரம் கீழதான் விட்டு வெக்கறது”

“நான் எறக்கி விட்டாலும் அது ஓடியாறுதுபா”..என்றாள்..

என்னவாச்சும் சொல்லிட்டு இரு..!!

“அப்போவ் உனக்கே தெரியும்ல
அம்மா செத்து மூணுமாசம் ஆச்சு
அப்போதான இது பொறந்துச்சு
என்னவோ அம்மா மாதிரியே இருக்கு..”

அதும் சரிதான்.. அவ டவுன்ல வீட்டு வேலைக்கு போக..,
நான் இங்க ஆடு மேய்க்க வாழ்க்கை நல்லாதான் இருந்துச்சு..என்னவோ புதுசா இந்த நோய் வந்து அவ போய் சேர்ந்துட்டா..நம்ம இன்னும் கஷ்டத்துக்கு போய்ட்டோம்..

உடனே சிட்டு
“நான் படிச்சு நல்ல வேலைக்கு போனா எல்லாம் சரியாய்டும்ப்பா”..
என்றாள்.

“சரி இங்கன வந்து ஆடுகள மேய்ச்சலுக்கு கூப்ட்டு போயேன்..நான் கொஞ்சம் டவுன் வரைக்கும் போய்ட்டு வாரேன்..”
என்றார் சின்னச்சாமி..

சிட்டுவுக்கு நேற்று அப்பாவிடம் பேசியது ஞாபகம் வந்தது..

யப்போவ்..இந்த கொரனாவால ஊர்ல ஸ்கூல்லா லீவு வுட்டாங்க
இனி செல்ஃபோன்ல தான் படிக்கனும்னு சொல்லிட்டு இருக்காவ..எனக்கு ஒரு செல்போன் வாங்கிதரயா.. பத்தாவது பாஸ் பண்ணிட்டா போதும்னு இருக்கு..

அந்த அளவுக்கு இருந்தா நான்
உனக்கு வாங்கி தாராம இருப்பனா சொல்லு.. இந்த ஆடுங்கள வளர்த்து சந்தையில வித்தா நாலு காசு வரும் வாங்குன கடன அடைச்சிட்டா போதும்னு இருக்கு..
ம்ம்..நாம தலையெழுத்து என்னவோ அப்டி நடக்கட்டும்..

ஞாபகம் கலைந்து,
அம்மாவின் படத்தை கையெடுத்து கும்பிட்டு..
பட்டியில இருக்கும் ஆடுகளை மேச்சலுக்கு ஓட்டிப்போக தயாரானாள்..சிட்டு

சின்னச்சாமி புறப்படும்போது
“இந்தா இந்த துணிய முகத்துல கட்டிக்க” என்றாள்

டவுனுக்கு போய்விட்டு
இரவுதான் வந்தார் சின்னச்சாமி
சாப்பிட்டுவிட்டு தூங்க போகும்முன் சிட்டுவை அழைத்து
“நம்ம பட்டியில இருக்க ஆடுகள எல்லாம் மொத்தமா வெல பேசி இருக்கேன்.. டவுன்ல இப்ப ரொம்ப கிராக்கியாம்” என்றார்.

சிட்டுவுக்கு பக்கென்றது..
யப்போவ்..உனக்கென்ன பைத்தியமா.. எல்லாம் வித்துட்டு என்ன பண்ணுவியாம் என்றாள்..

அட வர்ரத வெச்சு பாத்துக்கலாம் என்ன சொல்ற..

இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபுடிக்கல..இப்பதான் நெறய பரவிட்டு இருக்கு.. என்ன ஆகும்னே தெரியல..எல்லா ஆட்டையும் இப்பவே வித்துட்டா வர காலத்துக்கு என்ன பண்ணுவ?

அட அதெல்லாம் பாத்துக்கலாம் ஒன்னும் ஆகாது கவர்மெண்ட்டு சரி பண்ணிடும்

யப்போவ்..அதெல்லாம் நம்ப முடியாது..வேணும்னா ஒன்னு செய்யி ரெண்டு இல்ல மூணு ஆடுகள வித்துட்டு அதுல வரத வெச்சு நாம இப்போதைக்கு இருந்துக்கலாம்..

ஆனா எந்த காரணத்த சொல்லியும் குட்டிய தூக்கிட்டு போய்டாத..என்றாள் தீர்மானமாக

அட சரி..நீ சொல்றதும் நல்லாருக்கு சிட்டு..
நானும் யோசிக்றேன்..என்றவாறு தூங்கிப்போனார்..

ஒரு வாரம் அப்படியே போனது..
அடுத்த வாரம் சனிக்கிழமை ரெண்டு ஆடுகளுடன் டவுனுக்கு போனார் சின்னச்சாமி..

ரெண்டே நிமிஷம் தான் அவர் நெனச்சத விட நல்ல விலைக்கே போனது ..

இன்னும் நல்ல இளசா இருந்தா நெறய வெல போகும்னு அங்க பேசிகிட்டதும் காதுல விழுந்துச்சு

சின்னச்சாமி மனசுல நெறய யோசனையோடு ஊருக்குள் வந்தார்.

மறுநாள்
ஏன் சிட்டு உனக்கு ஃபோன் வாங்க எவ்வளவு வேணும்

அது ஆகும்பா ஆறுல இருந்து பத்தாயிரம் வரைக்கும்.
என்னாச்சுப்பா? என்றாள்..

ஒன்னுமில்லமா சும்மாதான் கேட்டேன்..என்றார் சின்னச்சாமி.

அதற்கும் அடுத்தவாரம் சனிக்கிழமை காலையில விடிந்ததும் எழுந்த சிட்டு..
வெளியில் வந்து குட்டி ஆட்டை தேடினாள்.

அப்பாவின் கட்டிலும் காலியாக இருந்தது..

பட்டியில பார்த்தாள் ரெண்டு ஆடு கம்மியா இருந்துச்சு

மேய்ச்சலுக்கு போகாம எங்க போனாரு என்று அக்கம் பக்கம் விசாரித்தாள்..

டவுனு பக்கம் ரெண்டு ஆட்டையும் தோள் மேல குட்டியையும் போட்டு காலையில போனாருன்னு
டீ கடையில சொன்னதும்..

தூக்கி வாரி போட்டது சிட்டுவுக்கு..

வேகமா வீட்டுக்கு வந்து அம்மா படத்தை கும்பிட்டு விட்டு கதவ சாத்திட்டு
துணிய எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு..
டவுனுக்கு புறப்பட்டாள்..

இங்க எங்கன போய் இவர தேட..மனசுக்குள் கொஞ்சம் கலவரமாகவே இருந்தது சிட்டுவுக்கு.

அங்க இங்க விசாரித்து தேடி ஆடுகளை விற்கும் இடத்தை கண்டு பிடித்து அப்பாவை பற்றி விசாரித்ததில்..

அட.. இப்பதான்மா வித்துட்டு எதோ செல்ஃபோன் வாங்கனும்னு பஜாருக்கு போனாரு என்றார்கள்.
அங்க இருந்தவர்கள்

அவளுக்கு இன்னும் துக்கம் கூடியது..

சுற்றியும் பார்த்த போது
அவ வீட்டு ஆடுக ரெண்டும் கூடவே குட்டியும் அங்கேயே இருந்ததை பார்த்து கண் கலங்கினாள்.

அத வாங்குனவருகிட்ட போய்
“ஐயா..எங்கப்பாரு எனக்கு தெரியாம இந்த குட்டிய தூக்கிட்டு வந்துட்டாரு.. அத மட்டும் கொடுத்துடுங்க நா அப்பாகிட்ட இருந்து பணத்த வாங்கி தந்துடுறேன்” என்றாள்..

பாப்பா அதெல்லாம் முடியாதும்மா
இன்னிக்கு கிராக்கியே இந்த ஆடுதான்..நீ போய் உங்கப்பாகிட்ட பேசிக்க..கொஞ்ச நேரத்துல வண்டி வந்ததும் நாங்க போய்டுவோம்..

இருங்கய்யா..நான் எங்க அப்பாவ தேடி கூப்ட்டு வரேன்..என்று சொல்லிவிட்டு ஓடினாள்..

செல்ஃபோன் கடையாக தேடியதில் ஒரு கடையில் இருந்தவரை பார்த்து கத்தினாள் சிட்டு..

“யப்போவ்வ்வ்..என்ன காரியம் பண்ண நீ.. எதுக்கு குட்டிய விக்கறதுக்கு எடுத்து வந்த”
என்று ஆவேசமாக கத்தினாள்..

கடைக்காரருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை..

என்னம்மா என்றார்..

சார் எங்கப்பா.. நான் ஆசையா வளக்குற குட்டி ஆட்ட வித்து எனக்கு செல்ஃபோன் வாங்க வந்திருக்கார்..

எனக்கு இப்ப செல்லு வேணாம் சார் அந்த பணத்த கொடுங்க நான் குட்டிய திரும்ப வாங்கனும் என்றாள்..கண்கள் கலங்க

சின்னச்சாமி..
சிட்டு நீ இதலதானே பாடம் படிக்கனும்னு சொன்ன அதான் வேற வழி இல்லாம குட்டிய வித்துட்டேன்..என்றார் கண்ணீரோடு..

பரவாயில்ல..நான் எப்ப ஸ்கூல் திறப்பாங்களோ அப்ப படிச்சுக்றேன்..நீ குட்டிய வாங்கி குடு இப்ப..உனக்கே தெரியும்ல அது செத்துப்போன அம்மாவோட மறு பிறவின்னு..என்று சொல்லி அழ தொடங்கினாள்.

கடைக்காரரும் சரி சரி அழாதம்மா இருங்க..என்று
பணத்தை கொடுத்தார்..

வாங்கிக்கொண்டு இருவரும் ஆடுகளை விற்ற இடத்துக்கு வந்து விற்றவர்களிடம் பணத்தை கொடுத்து குட்டியை வாங்கிக்கொண்டு
ஊருக்கு புறப்பட்டனர்..

இரவு முழுக்க குட்டியை அருகில் வைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்..சிட்டு..

சின்னச்சாமிக்கும் மனதில் இனம் புரியாத எதோ ஒன்று அழுத்தியது..அப்படியே தூங்கிப்போனார்..

ரெண்டு நாள் கழித்து
காலையில் எழுந்து வீடு பெருக்கி
சமைத்து மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு மேய்ச்சலுக்கு இருவரும் புறப்பட இருந்த போது

ரெண்டு மூன்று வண்டிகள் வீட்டுக்கு அருகே வந்தன..ஊர்ல கொஞ்ச பேரும் அங்க வந்தனர்..

காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார்..அவருடன் இன்னும் சிலர் கேமிராவுடன் வந்தனர்.

சின்னச்சாமியும் சிட்டுவும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்..

வீட்டுக்குள் வந்ததும் அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்..

நான்தான்மா பக்கத்து தொகுதி எம்.பி குமரன்.
நீ செல்ஃபோன் கடையில உங்க அப்பாட்ட பேசினத யாரோ வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கு டுவிட்டர்ன்னு போட்டாங்க..
அது அங்க இங்க சுத்தி என் கண்ணுக்கு பட்டுச்சு
மனசு கேக்கல..அப்படியே விசாரிச்சு உன்ன கண்டு புடிச்சு பாக்க வந்தோம்..

அய்யா..வீட்டுக்கு உள்ள வாங்க என்றார் சின்னச்சாமி..

உள்ளே வந்து தரையில் அமர்ந்து
சிட்டுவை அழைத்தார்..

இந்தாம்மா நீ படிக்க செல்ஃபோனு
சிம் ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் பண்ணி இருக்கு நல்லா படிக்கனும்..சரியா.. என்றார்..

சிட்டுவுக்கு கண்கள் கலங்கி இருந்தன..செல்ஃபோனை வாங்கிக்கொண்டு கையெடுத்து கும்பிட்டாள்..

அட அழகூடாது..என்று அவளை தேற்றிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்..

அவளிடம் ஏதாச்சும் சொல்லுமா லைவ் நியுஸ் போய்ட்டு இருக்கு என்றார்.

மைக்கை வாங்கி
“எம்.பி அய்யாவுக்கு நன்றி..
என்ன மாதிரி நெறய பேர் கிராமத்துல இப்டி வசதி இல்லாம படிக்க முடியாம இருக்காங்க.. அவங்களுக்கும் இதே மாதிரி எல்லோரும் உதவி பண்ணுங்க”

அதுக்கு முன்னாடி இந்த நோய்க்கு சீக்கிரமா மருந்து கண்டு பிடிச்சு எங்கம்மா மாதிரி யாரும் சாகாம
இருக்கனும்னு கடவுள வேண்டிக்றேன்..என்றாள்.

“நிச்சயமா நடக்கும்ம்மா”என்று
நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு அனைவரும் புறப்பட்டு போனதும்…

குட்டி ஆடு ஓடி வந்து அவள் அருகில் நின்றது..!!

எங்க அம்மா.. என் செல்லம் என்று..ஆசையுடன் அதை தூக்கி கொஞ்சினாள்..சிட்டு..!!

சிரித்தார் சின்னச்சாமி.

Related posts

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

Kesavan Madumathy

Sanjay Dutt in hospital after complaining of breathlessness

Penbugs

COVID fear denies dignified burial of man in Puducherry

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Intense COVID19 can be controlled, Dharavi is an example: WHO’s Tedros

Penbugs

Leave a Comment