ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.
நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுக்க 18.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள். இந்நிலையில் இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிதாக 1.58 கோடி சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸில் புதிதாக இணைந்துள்ளார்கள். இதன்மூலம் 22% வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்துள்ளது. கரோனாவால் உலகம் முழுக்க வணிக நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. அதன் வருமானம் பல மடங்கு குறைந்துள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸுக்கு அந்த நிலை இல்லை. முதல் காலாண்டு வருமானமாக ரூ. 44,223 கோடி கிடைத்துள்ளது.
எனினும் கடந்த சில மாதங்களில் வருமானம் குறைந்துள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊரடங்கு உத்தரவால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஓரளவு கூடியுள்ளது. ஆனால் டாலரின் மதிப்பு அதிகமானதால் சர்வதேச வருமானம் எதிர்பார்த்ததை விடவும் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.