வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காரணமாக சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கேட்கப்பட்டதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார.
