Penbugs
InspiringPolitics

சாதியற்ற தமிழன்!

சாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு உள்ளிட்ட அம்சங்களில் பாபாசாகேப் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கய புரட்சியாளர்களுக்கெல்லாம் புரட்சியாளர் தான் பண்டிதர் அயோத்தி தாசர்

அப்போதைய சாதிவாரி கணக்கெடுப்பின் போது, ”தீண்டத்தகாதவர்கள் என்போர் இந்து அல்லாதவர்கள். அவர் சாதி பேதமற்ற தமிழர்கள்(Casteless Tamils)”என்ற முற்போக்கு கருத்தாக்கத்தை முன்மொழிந்தார்.

‘தமிழன்’ இதழின் நிறுவனரும் , ‘தமிழ்த் தேசியத் தந்தை’யுமான அயோத்திதாசப் பண்டிதர் பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச்சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்பே பேசியவர்.1891ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜனசபை’யையும் நிறுவியவர்.

தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தார்

தமிழன் வார இதழில் பெண்கள் எழுதுவதற்கென தனி ‘பத்தி’ (column) ஒன்றை வெளியிட்டவர் அவர். சுதேசி மற்றும் சுயராச்சிய இயக்கங்களில் கலந்திருந்த சாதித்திமிர், மதத் திமிர்,அறிவுத்திமிர் மற்றும் பணத்திமிர் ஆகிய நான்குவகைத் திமிர்களை அடையாளம் காட்டிய அயோத்திதாசர், அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிட சாதிப்பெருமையைப் புறக்கணிப்பதே முதன்மையானது என வலியுறுத்தினார்.

தமிழ் அடையாளமானாலும், பௌத்த அடையாளமானாலும் அது சாதியற்றதாக உள்ளதா என்பதிலேயே அயோத்திதாசர் கவனமாக இருந்தார். சாதியை ஏற்றுக்கொண்ட அல்லது சாதியோடு சமரசம் செய்துகொண்ட எதனையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை

முதன் முதலாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெண் விடுதலை, பவுத்தம், பகுத்தறிவு, இந்துமத எதிர்ப்பு போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்பை செய்த பண்டிதர் அயோத்திதாசர் நெடுங்காலமாக வரலாற்றில் மறைக்கபட்டிருந்தார். அறிவின் எழுச்சியால் இப்போது வரலாற்றில் மறைக்கமுடியாத ஆதவனாக அயோத்திதாசர் உயர்ந்து நிற்கிறார். பண்டிதரை படிப்பதன் மூலமாகவே இன்றைய இளம்தலைமுறை தன்னை உய்வித்துக்கொள்ள முடியும்.

Leave a Comment