Penbugs
Deepak Krishnaசிறுகதைகள்

நட்பின் கதைகள் – நட்பு 3

முன்னுரை

வணக்கம்! நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான்! சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம் என்றும் முடிவெடுத்துள்ளேன். இதன் முதல் பாகத்தில் ஒவ்வொரு நண்பரிடமும் நான் நட்பான கதைத் தொகுப்புகள் இருக்கும்! ஒவ்வொரு வாரத்திற்கும் தொடர்பு இருக்கும், இல்லாமலும் இருக்கும்! தனியாக ஏதோ ஒரு வாரம் ஒரு பகுதியைப் புறட்டிப் படித்தாலும், அது ஒரு கதையாய் இருக்கும்! இது என் முதல் முயற்சி! படிக்கும் அத்தனை நண்பர்களும் என் நட்பின் கதைகளாய் ஆக உள்ளதை எண்ணும்போதே கிளிர்ச்சிக்கிறது. நன்றிகள்!

கடந்த வாரம் வெளிவந்த கதையைப் படிக்க : நட்பின் கதைகள் – நட்பு 2

   – ‘எழுத்தாணி’ ஆகிய நான்!

  

நட்பு – 3!

நட்பு என்னும் இச்சை!

சில வருடங்களுக்கு முன்:

டிசெம்பர் மாதத்தில் வாசத்தைக் குளிர் போர்வையில் மறைத்துக்கொண்டு ப்ரகாசிக்கும் வாடை மல்லிகள் நிறைந்த வேளை ஒன்றில், புது அனுபவம் ஒன்று பராவசமூட்டத் துவங்கிய கதை இது! கண்ணாடிக்கார நண்பன் ஒருவன் என் வீட்டருகில் இருந்தான். பள்ளியில் என் வகுப்பு நண்பனாக அறிமுகமாகி, அறிவியல் அறிவு ஜீவியாக வலம்வந்தவன். எப்போதுமே நான் ஓடத்-தயாராகவே இல்லை என்றாலும் எனக்கு ரெண்டு அடி முன்னே நின்றுகொண்டு, என்னை முந்தி விட்டேன் என்று சொல்வதில் குளிர்க்காயும் லட்சியவாதி அவன். தோல்விப் படிக்கட்டுகள் ஏறாமலேயே ‘லிஃப்ட்’ற்குக் காத்திருக்கும் முட்டாள் இல்லை அவன். என்ன எஸ்கலேட்டர்’ வந்துவிடும் என்று முன்கூட்டியே கணிக்கக் கூடிய பொது அறிவு மிக்கவன். ஆனால் அந்த ‘எஸ்கலேட்டர்’ வந்தால் தான் நகருவேன் என்று நின்றுகொண்டே, மற்றவர்களுக்கும் வழிவிட மாட்டான்! படிப்பு விஷயத்தில் மட்டும்! மற்ற எல்லாவற்றிலும் சற்றும் பொறாமை இல்லாதக்கண்ணாடி அணிந்த வேப்பமரபுத்தன் அவன்!!

நிச்சயதார்த்தம் முடிந்த நண்பரைப் பார்க்க ‘டையாப்பெர்கள்’  வாங்கிக்கொண்டு செல்வதின் சாதுர்யத்தில் எவ்வளவு முட்டாள்த்தனம் இருக்கக் கூடுமோ, அதைவிட அதிகச் சாதுர்ய லட்சணம் நிறைந்த செயல், ஒன்பதாவது படிக்கும்போதே மாணவர்களைப் பத்தாம் வகுப்பிற்கு ‘டியூஷன்’ அனுப்புவது. நானும் ‘ஸ்கூல் பேக்’கை மாட்டிக்கொண்டு நடக்கையில், ஒரு பொதிமூட்டைச் சுமந்தக் கழுதையாக வலம் வந்ததால், படிப்புத் தலைக்கு ஏறி வழி வகுக்காமல், முதுகுக்கு ஏறி ‘வலி’ வகுத்தது. ‘கிரிக்கெட்’டில் கவனம் செலுத்த முடியாமல் போகுமோ என்ற பயம் வேறு! இந்தியாவின் சராசரி பதின்வயது சிறுவர்களைப்போல் எனக்கும் இந்தியாவிற்கு விளையாடவேண்டும் என்ற எண்ண அறியாமை இருந்தது. தெருவிளக்கில் தொலைந்துப்போய் விளையாட வேண்டிய என்னை,விதிவிலக்கு என்றுவிட்டு விடாமல் இழுத்துக் கட்டிக்கொண்டு எங்கோ கூட்டிக்கொண்டு சென்றனர் என் வீட்டார்கள்.

பக்கத்துத் தெரு ‘சலீம் பாய் கடை’ கல்லா கட்டவேண்டும் என்பதற்காகவே, தாதா கங்குலி இந்தியக் ‘கிருக்கெட்’டை மீட்டெடுத்து கலக்கிக்கொண்டிருந்த காலத்தில், ‘தோனி’யின் வருகையும் சிறப்பாக அமைந்தவிட்ட நேரம் வந்தும், அசாருத்தின் படம் போட்டுப் பல ஆண்டுகள் விற்பனையே ஆகாத ‘கோடு இல்லாத அன்ரூல்ட் நோட்டுப் புத்தகம்’ ஒன்றை வாங்கிக் கையில் கொடுத்துவிட்டு, டியூஷன் மாஸ்டரின் வீட்டைக் காட்டி வழி அனுப்பி வைத்தனர், என் வீட்டினர்.

இந்த இடத்தை என் வீட்டாருக்கு அறிமுகம் செய்துவைத்த “கொலம்பஸ்” அதே கண்ணாடிக்காரப் பள்ளி வகுப்பு புத்தன்! அவனுடன் ஒரு ஒல்லிப்பிச்சான் ஒருவன் நக்கலான பார்வையுடன் என்னை கவனித்துக்கொண்டு இருந்தான். கையில் இருந்த ‘நோட்டுப் புத்தகத்தை’ அவன் பிடித்திருந்த விதம், ஆசிரியர்கள் அவன் தோள்ப்பட்டையைத் தட்டிக் கொடுப்பதுவரைப் படம் காட்டியது! படிப்பாளி என்று தோன்றியது. பத்தாதக் குறைக்கு ஹிந்திக்காரன் வேறு! ஹிந்திப் பேசக் கூடிய தமிழர்களையே ‘சேட்டு’ என்று கூப்பிடும் பண்பாட்டில் இருந்து வந்த எனக்கோ, அவன் ‘சேட்-ஜீ’ ஆனான்! ஆனால் படிப்ஸ் “ஜீ” என்பதால் நான் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டேன்!

அந்த டியூஷனிற்கு என் பள்ளியில் இருந்து நாங்கள் மூவர் மட்டுமே போகும்போதேத் தெரிந்திருக்க வேண்டாமா என் வீட்டினருக்கு? டயம் பாஸ்-ற்கு டியூஷன் போகப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கோ, டயம் பாஸ்-ற்கு டியூஷன் எடுக்கும் வாத்தியிடம் சிக்கிய வரலாற்றுக் கதையில் மாட்டியதை ஓரங்கட்டிக்கொள்கிறேன்! ஒரே மிதிவண்டியில் வந்த ஜீ-யும் கொலம்பஸ்-ம், என் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்ததும், ‘ரஃப் நோட்டை’ என்னிடம் கொடுத்துவிட்டு,சலீம் பாய்-டம் இருந்த மிச்சச் சொச்ச அஜய் ஜடேஜா மற்றும் ராபின் சிங்க் இருந்த நோட்டுப் புத்தகங்களைப் பொறுக்கிக்கொண்டு வர அவ்வளவு அவசரம் ஏன் என்றுப் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்! போர் அடித்தது! உடனே நடராஜாவாக அடுக்குமாடி அப்பார்ட்மெண்டின் உள்ளே கால் எடுத்து வைத்தேன்!

தமிழகத்தில் நடக்கும் தேசிய கட்சிகளின் மாநாட்டைப்போல் காலியாக இருந்த அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் நான்காம் மாடியில், தனிக்காட்டு ராஜாவாக நிற்க சற்று பயமாகத் தான் இருந்தது. ‘404’ஆம் எண் பொறிக்கப்பட்டு இருக்கும் ஒரு கதவின் முன் நின்றபோது, “பெட்ரோல் குழாயில்” இருந்து அரை லிட்டர் ‘சென்ட்’ ஐ அடித்ததுபோல் வாசம் சிறகடித்து, அவளது உருவத்தையும் உயரத்தையும் வெளிக்காட்டும் வரை பரவி மயக்கடிக்கச் செய்தது. முழித்துக்கொண்டேத் திரும்பித்-திரும்பி அங்கும் இங்கும் பார்த்தேன்! யாரும் இல்லை! வெற்றிடம்! அப்போது தான் எனக்கு முதல் முறையாய் பெண்களின் அலங்கார மகிமைகள்புரியத் துவங்கியது! அவள் இருந்துவிட்டு சென்ற தடையம் கூட காற்றில் இருக்கக் கூடும் என்ற நவீன உண்மை என்னை உசுப்பச் செய்து, சுவாசிக்கத் தல்லாடிய தருணத்தில், முதல் முறை “இச்சை”ஏற்பட்டது!

கதவைத் தட்டும் முன், ‘இன் ஷர்ட்’ ஐ வெளியே எடுத்துவிட்டு, அரைக்கைச் சட்டையென்றும் பாராமல் அதை இன்னும் மேலே மடித்துக்கொண்டு, முடியை ஒரு முறைக்கு மூன்று முறை நன்கு சீவிக்கொண்டு, எச்சில் முழிங்கிக்கொண்டே ‘காலிங்க் பெல்’ ஐஅமுக்கப் போனேன்! தயக்கம்! தொலைநோக்காகச் சிந்தித்து வயிற்றைக் கொஞ்சம் உள்ளே இழுத்துக்கொண்டு, எப்படி நிற்பது என்று தொலைக்காட்சி விளம்பர மாடல் நடிகரைப் போல் பாவனை செய்துகொண்டு, நடப்பதற்கு ஒத்திகைப் பார்க்கும்போது, லிஃப்ட் ‘ரிங்”கித்த சத்தம் கேட்டது. கொலம்பஸ்-ம் ஜீ-யும் சர்வதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமான ஐ. நா ஒப்பந்தமாய் மாறி இணைந்து வந்துகொண்டிருப்பார்கள் என்று எண்ணி ‘404’ஆம் எண் கதவை நோக்கி ஓடினேன். இவ்வளவு நேரம் கட்டிக் காத்த கண்ணியமும் ஒழுக்கமும் மறந்து மூச்சுவாங்கிக்கொண்டே ஆர்வத்தில் பெல்-ஐ மறந்து, தன்னிலை அறியாமல் கதவைத் தட்டினேன்!

கதவைத் திறந்தது ஒரு எழுவது வயது மூதாட்டி! மாஸ்டர்-இன் பாட்டி. என் உள்ளுக்குள் கீச்சுகள் மூட்டிய என் இச்சைகளே என்னைப் பச்சைப் பச்சையாக திட்டியதில், என் முகம் வாடியது. என் வாடிய முகத்தை அணுகிய மூதாட்டியோ, என்னை : பெண்களைப் பெற்ற அம்மாக்கள் அலறி, அப்பாக்களை உசுப்பி பயம் காட்ட வளியுறுத்துவதன் விளைவாக அண்ணங்காரர்களைக் கோபிக்கச் செய்யும் அந்த மாதிரி பையன் என்று நினைத்துக் கொண்டது புரிந்தது. என் இச்சைகள் இறந்து, “ஏ.ஆர்.ரகுமான்”ஐப்போல் சாந்தமாகி, அவர் சொல்வதுப்போன்ற பணிவுடன், அவர் குரலில் இருக்கும் அடிநாத அன்புக்கொண்ட முகமாக என்னை மாற்றிக்கொண்டேன்! பின்னால் லிஃப்ட்-ல் இருந்து வந்தது பக்கத்து சிடுமூஞ்சி அண்ணன் என்று சொல்லிக்கொள்ளும் அங்கிள் என்று தெரிந்ததும், இலவச இணைப்பாக ஜிலுஜிலுக்கும் “சினிமா மலர்” எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கையில் கசகசக்கும் “ஆண்மிக மலர்” வந்தால் எப்படி இருக்குமோ, அவ்வளவு கடுப்பாக வேறு இருந்தது. அலங்காரம் அலங்கோலமாகி மூதாட்டி வரை மொக்கை வாங்கிய கடுப்பு தான்! வேறொன்றும் இல்லை! வியர்வையைத் துடைத்துக்கொண்டே மூதாட்டியைப் பார்த்த போது, பெருசின் கவனமோ, நான் அமர வேண்டிய மேஜையின் பக்கமாய்த் திரும்பி இருந்தது!

சிதறிய என் விழிகளில் விழுந்த பிம்பம், அன்றைய “யுவன் ஷங்கர் ராஜா”வைக் காதில் தட்டி எழுப்ப, “ஜிவ்” என்று குளிரடித்துப்,பட்டாம்பூச்சிகள் பறந்து “பட்டர்ஃப்லை எஃபெக்டைத்” (BUTTERFLY EFFECT) துவக்கி வைத்ததில், மனதிற்குள் ஒரு மகிழ்வு “சுனாமி” ஒன்று புறப்பட்டு, என்னை அறியாமல் முகத்தில் வழிந்தக் கொண்டிருந்தது. “நெற்றியில் இருந்தது பொட்டா? இல்லை மச்சமா?” என்று புருவத்தை உயர்த்திக் கவனிப்பதற்குள் அவளது கருவிழியின் கவனம், என் இருவிழி மேல் திரும்பியபோது, திட்டமிட்டு திருடுபவன் ’சீ.சீ.டி.வி கேமரா’வில் இருந்து ‘சடார்’ என்று முகத்தைத் திருப்புவதுபோல் சிறுபிள்ளைத் தனமாகத் திரும்பிக்கொண்டேன். சினிமாவில் வரும் ‘மாஸ் ஹீரோ’க்களைப் போல் கெத்தாக திரும்பிப் பார்க்கலாம் என்று ஐந்து விநாடிகளை வெற்றாகக் கடந்துக் கொண்டிருக்கையில், பொருமை இழந்த யுவராஜ் சிங்க்-ஐப் போல் ‘சடார்’ என்று திரும்பினேன்! அவளோ, டியூஷன் மாஸ்டரின் இருக்கையில் எதிர்ப் பக்கமாக திரும்பி அமர்ந்துகொண்டு முதுகைக் காட்டிக்கொண்டு இருந்தாள்! ‘பி.டி பீரியட்’ டில் பெய்த மழையப் பார்த்து ரசனை இழந்த கடைசி பென்ச் கழிசடைப்போல் பாடுபட்டுத் தவித்தது என் மனம்! இருந்தும் அவளது கூந்தலோ ‘சிலுக்’ கித்து, “ஹெட் & ஷோல்டர்ஸ்-க்கும் க்ளீனிக் ப்ளஸ்-ற்கும்” மாற்றி-மாற்றி மார்க்கெட்டிங்க் செய்தது. அதன் ‘பளிச்’சில் கிளிர்ச்சிட்டு ஓடிய எண்ண அலைகளை சென்சார் செய்துகொள்கிறேன்!

மேஜையில் சென்று அமருமாறு மூதாட்டி கட்டளையிட்டதும், தயங்கிக் கொண்டே அவளை நெருங்க-நெருங்க, அந்த மூச்சுத் திணரல் மீண்டும் ஏற்பட்டது. அந்த வாசனை என்னைச் சுண்டி இழுத்து, அவள் அருகில் கொண்டுச்சேர்த்தது. மேஜையில் மாஸ்டரின் இருக்கையில் அவள். எதிரே ஒரே ஒரு இருக்கை! அமர்ந்தால் மாஸ்டரின் கண்களுடன் லாக் ஆகவேண்டி இருக்கும்! இடப்புறம் செவுற்றை ஒட்டி ஒரு மேஜையும், வலப்புறம் மீன்தொட்டிக்கு நடுவே மற்றும் ஒரு மேஜையும் இருக்க, இடையில் ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் இணைந்து நடமாடும் அளவைமட்டும் விட்டு- விட்டுஆக்கிரமித்துக் கொண்டிருந்தது!வலப்புறம் அமர்ந்தால், அவள் மாஸ்டருக்கு எதிரில் அமர்ந்துவிட நேர்ந்து, என்னால் அவளை சுலபமாக தரிசிக்க முடியாது. எனவே நானே செவுற்றின் பக்கம் அமர்ந்துகொண்டேன். ஒன்று, எனக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அவள் அமரலாம். இல்லை மாஸ்டரிற்கு எதிரில், என் வலப்புறம் இருக்கும் இருக்கையில் அமரலாம்! மாஸ்டரின் எதிர்ப் பக்கம் இருக்கும் சேர், கொஞ்சம் செவுற்றிற்கு சாதகமாய் வேறு இருக்கும். எதார்த்தமாக அங்கும் இங்கும் நான் திரும்பிப் பார்த்தால் கூட மிக அருகில் அவள் இருக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு!

அவள் வாசம் என்னை வாட்டியது, அவள் கூந்தல் என்னை வருடியது. அவளதுப் பச்சைச் சுடிதார் என்னைச் சலனப் படவைத்தது. “துப்பட்டா இல்லை என்பது கூடுதல் தகவலா? இல்லை குதூகலத் தகவலா?” என்று அறிந்துக் கொள்ள முடியாமல் வயது போராடிக்கொண்டிருந்தது. அவள் ஜாலியாக ஒரு புத்தகத்தைப் புறட்டிக்கொண்டே, “நெஞ்சோடு கலந்திடு உறவாலே” பாடலை ஹஸ்கி குரலில்பாடியபோது“ஜிலு-ஜிலு”த்தது. “ராஜ் டி.வி-யின் ராஜகீதம் நிகழ்ச்சியில்இவள் ஏன் பாடக்கூடாது?” என்று சொல்லிப் பேச்சைத் துவங்கலாம் என்று சிந்திக்க வைத்தது! வழக்கம்போல் அது நான் என் மனதுக்கு மட்டுமே சொன்ன ரகசியமாய்க் கசிந்தது. “இவ்வுறவுக்கு உலகத்தில்பெயரில்லை” என்ற வரிகளை அவள் பாடும்போது, எனக்குள் “நாம் வயதுக்கு வந்தோம், நாம் இளமைக்கு வந்தோம், இந்த இருவது வருடம், அட வீனாய்ப் போனோம்” என்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் பாடல் தோன்றி எண்ணத்தில் பிசிறுத் தட்டிக்கொண்டு இருந்தது. வயதுக் கொஞ்சம் குள்ளமாய்ப் பதினைந்தைத் தொட முடியாமல் குதித்துக்கொண்டிருந்தாலும், என் எண்ண-அலைகளோ, அத்தகைய உயரத்தில் இருந்தன!

முதல் முறையாக அவள் திரும்பினால். வயது கோளாறு இருந்தும் என் கண்கள் முதலில் நோக்கியது அவள் நெற்றியை! நெற்றியில் இருந்தது ‘பொட்டு’ இல்லை மச்சம்தான் என்று கண்கள் கண்டதும், இதழ்கள் இழுத்துக்கொண்டுத் தானாக புன்னகைக்கையில், காய்ந்த உதட்டில் ஈரப்பதம் ஆடியஎன் நாக்கினை அவள் நோக்கியதும், கபடியில் எதிரிக் கோட்டில் கால் வைத்து, டக்கென்று பின்னால் இழுத்துக்கொள்ளும் வீரனைப் போல் நாக்கை இழுத்துக்கொண்டு, மௌனமாய் ஒரு நொடி அவளைப் பார்க்க முயன்றேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்ததும், வாயில் வார்த்தை வரவில்லை! அவள் புன்னகைத்த ஆணவத்தில் தலைத் தானாக ஆடத் துடித்துக்கொண்டிருந்த வேலையைப் பயன்படுத்தி, அவள் புன்னகைக்கு பதில் சொல்வதுபோல், தலையை மட்டும் ஆட்டினேன்! சொல்லப்போனால் தலைகனத்தில் ஆடினேன்!

நான். அவள். அந்த சென்ட் சுவாசம்! இடையே மூன்றடித் தொலைவு! நடுவில் எதுவும் தொந்தரவாக நுழைந்துவிட முடியாது என்று உறுதியாக இருந்த நொடியில் காலிங்க் பெல் அடித்துத் தொந்தரவுச் செய்தது. அவள் டக்கென்று எழுந்துக் கதவைத் திறக்கச்சென்றாள். கதவைத் திறந்தால் ஜீ-யும் கொலம்பஸ்-ம்! கொலம்பஸ்-ஐப் பார்த்ததும் புன்னகைத்து அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட, அவனும் அவளைப் பெயர் சொல்லிப் பேசத் துவங்கினான். அவள் பெயர் என்னவென்று என் காதில் விழவில்லை! என்னைப் பொருத்தவரை அவள் ஒரு “பச்சைச் சுடிதார்”தான்! பிற்காலத்தில் எந்த நிற உடை அணிந்துவந்தாலும் இது தான் அவள் பெயராக இருக்கும் என்று உணராமலேயே வைத்தச் செல்லப் பட்டைப் பெயர் அது!

பச்சைச் சுடிதார் பேரழகியா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை! ஆனால் அளவான அழகுடன், மிதமான அலங்காரத்தில், இயல்பானச் சிரிப்புடன், எதார்த்தமானக் கூந்தலில், பொருத்தமான உடையணிந்து, சிக்கனமாய் நகையணிந்து, கட்சிதமான பார்வையில் நிதானமாய் நடந்துகொள்ளும் பெண்கள் கொள்ளை அழகு என்று எனக்குப் புரிய வைத்த சிம்பிள் சிண்ட்ரல்லா அவள்! இவளால் நான் சில நாட்கள் தூக்கத்தைத் தொலைக்கப் போகிறேன் என்று, அன்று எனக்குப் புரியவில்லை. எதிரே வந்து நின்ற ஜீ மீண்டும் என்னை நக்கலாகப் பார்த்தான். இம்முறை கோபமும் கலந்திருந்தது. காரணம் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் தான் மாஸ்டர் அமர முடியும்! என் நோட்டுப் புத்தகத்தில் தான் அவர் கணக்குப் போடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்ற கோபமாகக் கூட இருக்கும் என்று புரிந்தது.

விளைவாக, அடுத்த நாள் மாலை, நான் ‘7.25’ மணிக்கே டியூஷனிற்கு சென்றுப் பார்த்தால், ஜீ-யோ ‘7.20’ற்கே வந்து நான் அமர்ந்திருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டான்! இப்போது ஜீ-யைப்போல் நான் மாறி அவனைக் கோபித்துக் கொண்டிருப்பதை அவன் கவனித்ததை நான் உணர்ந்தேன்! அடுத்த நாள் நான் ‘7.15’ற்கே சென்று இடம் பிடித்தேன்! அவள் என் எதிரில் அமர்வதில் இருக்கும் சுகம் இந்த ஜீ-க்கு எப்படிப் புரியும்? துடிப்பில் மிதந்துகொண்டிருந்த என் எண்ண மேகங்களைப் படிப்பில் கரைந்துகொண்டிருந்தக் கானல் நீருக்குப் புரிய வைக்க முடியுமா? இப்படியே தொடர்ந்துகொண்டிருக்க, ஒரு நாள் இருவருமே ‘7.30’ மணி டியூஷனிற்கு ‘7’ மணிக்கே சென்றுவிட்டோம்! வீடு பூட்டி இருந்தது. இருவருக்கும் போட்டி! பொறாமை! எனக்கோ சம்மக் கடுப்பு! “இவனுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது”, என்றெல்லாம் உள்ளுக்குள் சாபம் விட்டுக்கொண்டிருந்தேன்! என்ன, பதிலுக்கு எனக்கு படிப்பே வராது என்று அவன் ஹிந்தியில் சபித்துக்கொண்டு இருந்திருப்பான் என்று தோன்றியது! “இப்போது மட்டும் என்ன? படித்து கிழித்துவிட்டேனா” என்று நக்கலாக சிரித்தேன்! அவனும் என்னைப் பார்த்து நக்கலாகப் புன்னகைத்தான்! பச்சைச் சுடிதார் விஷயத்தில், படிப்பாளிகளான ஜீ-யும் கோலம்பஸ்-ம் போட்டியாக இருக்க மாட்டார்கள் என்ற சின்ன ஆறுதல் மட்டும் எனக்குள் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தது!

கொலம்பஸ் வந்ததும், மணி ‘7.30’ ஆனது! ‘ஷார்ப்’பாகப் பக்கத்து வீட்டில் இருந்த ‘ஆன்டி’ ஒருவர் வெளியே வந்து, அன்று டியூஷன் விடுமுறை என்பதைத் தெரிவித்தார். படிப்பாளியான கொலம்பஸ் சந்தோஷத்தில் உற்சாகித்துக்கொண்டிருப்பதுப் புரியாத நிலையில், பச்சைச் சுடிதாரைப் பார்க்க முடியாது என்று விளங்கியதும், என் முகமோ “இந்திய பட்ஜெட்” போல் தொங்கியது. ஜீ-யின் முகமும் தமிழக அரசியல் சூழலைப்போல் புரியாமல் முழித்துக்கொண்டேத் தொங்கியது! யாருக்கும் வீட்டிற்கு போய் சிக்கி வீட்டுப்பாடம் பண்ணும் கூண்டில் மாட்டிக்கொள்ள விருப்பம் இல்லை என்று புரிந்துகொள்ள முடிந்தது. மூவரும் சிரித்துக்கொண்டே வெளியேறிய பொழுது, கையில் ஒன்னரை மணி நேரம் இருந்ததை உணர்ந்து, “என்ன செய்யலாம்?” என்று கொலம்பஸ் கேட்டான்! “என் வீட்டில் யாரும் இல்லை”என்று நான் கூறியவுடன், கொலம்பஸ்-ஐயே முந்திக்கொண்டு ஜீ-யின் குரல் எஸ்கலேட்டர் ஏறி “போகலாம்” என்று கட்டளையிட்டது எனக்கு மிக-மிகஆச்சரியத்தை அளித்தது!

இழவு வீட்டில் கூடப் புகைப்படம் கேட்டு நச்சுப் புடுங்கிவிடுவார்களோ என்று அஞ்சிக்கொண்டேப் பாதியில் வீடுத்திரும்பும் சினிமாப் ப்ரபலங்களைப்போல், எனது தாய் தன்அலுவகத்தில் இருந்து எதிர்ப்பார்த்ததைவிட சற்றுமுன்னரே வீடுத் திரும்பியிருந்தார்கள். ஜீ என்னை முறைத்தான். நான் கண்டுக்கொள்ளாமல் அறைக்குள் நுழைய, ‘க்ளாஸ் லீடர்’ஐப் பின்தொடரும் ‘மக்குப் ப்ளாஸ்த்திரிகளைப்’ போல் அமைதியாக என்னைப் பின்பற்றினார்கள் இருவரும். எனக்கும் என் கணிணிக்கும் தனி அறை நியமிக்கப்பட்டிருந்த வீடு என்பதால், என் அறையில் தாளிட்டுத் தொலையும் உரிமை எனக்கு வழங்கப்பட்டு இருந்தது! தாளிட்டதும், ஸ்ரீகாந்த் தேவாவின் குத்துப்பாடலைப் போல் எப்போதும் கத்திக் கத்திப் பேசுக்கொண்டிருந்த நாங்களோ, இளையராஜா அய்யாவின் இரவு நேரக் காதல் போதைப் பாடல்கள்போல் மெல்லக் கிசுகிசுக்கத் துவங்கி முதல் முறை ரகசிய உரையாடல் நிகழ்த்தியது அப்போது தான்! மெதுவாகப் பள்ளி வகுப்பு ராணிகளின் பெயர்களைத் தட்டிவிட்டு, அவர்களையும் தொடர்புபடுத்தும் விதத்தில் அமைந்த பசங்களின் வகுப்பரைக் காவியங்களைப் பேசத் துவங்கினேன்! கொலம்பஸ் கண்டுகொள்ளவில்லை! ஆனால் அந்த “நயந்த் ஸ்டாண்டர்ட் நயந்தாராக்கள்”ஐப் பற்றி நான் பேசுவதில் ஜீ மட்டும் படு ஆர்வம் காட்டினான்! மெதுவாகப் பள்ளிக் கதைகளில் இருந்து திசைமாறி இணையத்தளத்திற்கு வந்தோம்! இணையத்தில் என்-நேரம் வேண்டுமானாலும் ஆபாசமான பிம்பங்கள் எட்டிப்பார்க்கும் அபாயம் இருக்கிறது. ஏன்! சாதாரண வெப் சைட்டுகளைக் கூடப் பார்த்துப்-பார்த்து ஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்தவேண்டும் என்றும், பெற்றோர்கள் பின்னால் நின்றுகொண்டிருக்கையில் கூட தவறான பிம்பங்கள் எட்டிப்பார்க்கும் அபாயம் இருக்கிறது என்றும் அக்கரையாக எச்சரித்தேன்! மெதுவாக ஜீ என் அருகில் வந்து என் காதில் “நெட் சென்டர் (INTERNET CENTRE) போகலாமா?” என்று வெளிப்படையாகக் கேட்டுவிட்டான்! கல்யாண ராமன் கமல் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கோ, சிவப்பு ரோஜாக்கள் கமல் போல் காட்சி அளித்தான் “ஜீ”! “அட எடுபட்டப் பயலே” என்று மனம் துள்ளி குதித்து, நெட் கஃபே-வுக்கு கம்பெனி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவனுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டது!

கொலம்பஸ்-ஐத் தவிர்த்துவிட்டுத் தான் போக முடியும்! அவன் எங்களைப் போட்டுக்கொடுக்க வாய்ப்புகள் அதிகம்! வயதின் கேள்விகளுக்குப் பதில் கூற நினைப்பது, பெருசுகளுக்கு ஏன் பொறுக்கித் தனமாகத் தெரிகிறது என்று புரியாத வயதல்லவா? எனவே சைதப்பேட்டையின் ஆரம்பத்தில் இருந்த என் வீட்டில் இருந்துகொண்டு, நானோ என் சொந்தக்காரர் சைதாப்பேட்டின் உட்பகுதியில் இருக்கிறார் என்றும், அவரைப் பார்க்கப் போகிறேன் என்றும் பொய் சொல்லிவிட்டு என் மிதிவண்டியை நோக்கினேன்! ஜீ-யோ தன் தந்தையின் உணவுக்கடை மாம்பலத்தில் இருப்பதால், அங்கே செல்லுவதாகச் சொல்லிவிட்டு மிதிவண்டிக்கு விரைந்தான். கொலம்பஸ் வேறு வழியில்லாமல் வீட்டிற்குத் திரும்ப, அன்றுதான் ‘கூலிங்க் க்ளாஸ்’ டீச்சர் போராடிப் புரிய வைக்க நினைத்தப் புவியியல் உண்மையான “உலகம் உருண்டை” என்பதையே நாங்கள் உணர்ந்துகொண்டு, நான் சைதாப்பேட்டையை சுற்றியும், ஜீ மாம்பலத்தை சுற்றியும் வந்து, அஷோக் நகரில் சந்தித்துக்கொண்டு சங்கமித்தோம்! அங்கிருந்து என்னிடம் இருந்த பண்ணிரெண்டு ரூபாயப் பொறுக்கிக்கொண்டும், அவனிடம் இருந்த எட்டு ரூபாய்ச் சில்லரைகளையும் கூட்டிப் பெருமூச்சுவிட்டுக்கொண்டும், அருகாமையில் இருந்த “சிஃபி நெட் சென்டருக்கு” விரைந்தோம்! அந்த ஒரு மணி நேர பரவசத்தைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது!

அவனுடன் பேசப் பேசத்தான் புரிந்தது, டியூஷனில் அவன் என்னுடன் போட்டிப்போட்டு இடத்தைப் பிடித்தெல்லாம் படிப்பிற்காக இல்லை, பச்சைச் சுடிதாருக்காகத் தான் என்று! தூக்கிவாரிப் போட்டது! இவன் படிப்புப் புலி என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருந்தேன்! இவன் படிப்பில் என்னைவிட மோசம் என்று நான் உணர்ந்துகொண்ட நொடியில் ஒரு சரியான ஆளுடன் தான் நாம் நட்பாகியிருக்கிறோம் என்று ஆருதல் அடைந்தேன்! நானாவது பச்சைச் சுடிதாருக்குக் “க்ரீடிங்க் கார்ட்” வாங்கி வைத்து எப்படிக் கொடுக்களாம் என்று ஐடியா பண்ணி, இணைப்பாக ஒரு கவிதை (எனக்கு மட்டுமே) எழுதி இருந்தேன். ஜீ-யோ அவளுக்காக எங்கள் டியூஷன் மொத்தத்திற்கும் (எங்கள் மூவருடன் சேர்த்து அவள் மற்றும் மாஸ்டர்) ஒரு நாள், தம் உணவுக் கடையில் இருந்துடின்னர் கொண்டு வந்து அசத்தலாம் என்று முடிவெடுத்ததைப் பார்த்து வியந்தே விட்டேன்! இருவரும் மிரண்டுபோய் இன்னும் நெருக்கமாகிவிட்டோம்! நண்பனான கொலம்பஸ் தெரிந்தவனாகவும் (அந்த காலக்கட்டத்தில்), நண்பன் மூலமாகத் தெரிந்தவன் நண்பனாவதும் “பசங்க” சமாச்சாரம் என்றும் உணர்ந்து கொண்டேன்!

“பச்சைச் சுடிதார் அண்ணன் என்று சொல்லிவிடுவாளோ?” என்று பயந்துகொண்டே அவளிடம் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்த நாங்கள், ஒரு நாள் அவள் பெயரைத் துணிந்து கேட்டப்போது, “பய்யா அக்கா வயசுக்கு மரியாத குடுங்கடா” என்றதும் “ஸோலோ வயலின்களாய்” அழ்மனது அழுகத் துவங்கி முதல் இச்சை முடிவுரை ஆனதை நினைத்து இன்றும் நாங்கள் சிரிக்காத நாளே இல்லை! அண்ணன் என்று கூறி ‘அலெர்ட்’ ஆகிவிடுவாளோ என்றுப் பார்த்தால் தம்பி எனக்கூறித் தப்பித்துவிட்டாள்! மேலும் ஒரு கடிதத்தை என்னிடம் வழங்கி, அதை பக்கத்து வீட்டு சிடுமூஞ்சி ஆகிய அண்ணன் என்று கூறிக்கொண்டிருந்த அங்கிள்-ற்கு வழங்கச் சொன்னதும், எனக்கு சத்தியராஜ் நடித்த அடிதடி படத்தின் “உம்மா உம்மம்மா” பாடல் நினைவுக்கு வந்து கடுப்பேத்தியது! ஜீ கையில் ஒரு கடிதம்! அந்த பக்கத்து வீட்டு அண்ணன் ஆகிய அங்கிள் அவனிடம் பச்சைச் சுடிதாருக்காக வழங்கி இருந்த கடிதம். அப்போதே நாங்கள் காதலன் இல்லை தூதுவன் தான் என்று அறிகுறிகள் தென்பட்டிருந்திருக்கிறதே என்று நினைக்கையில்…!

இரண்டு கடிதங்களையும் பிரித்து சுவாரஸ்யமாகப் படித்தோம்! அவள் ஆங்கிளத்தில் அஸ்ஸால்ட் பண்ணி இருந்தாள், அங்கிள் ஹிந்தியில் ஹீரோயிஸம் காட்டி இருந்தார். நானும் ஜீயும் வில்லனிஸம் காட்டி, அந்த இரு கடிதத்தையும் அசாருத்தின் பின்னாலும் ராபின் சிங்க் பின்னாலும் மறைத்து வெளியே எடுத்துக்கொண்டு போய், பக்கத்து ஏரியா குப்பைத்தொட்டியில் எச்சில் தொட்டு எழுத்துக்களை அரைகுறையாக அழித்து, லெட்டரைக் கிழித்துப் பீஸ் பீஸ்-ஆக்கி போட்டுவிட்டு மூச்சு வாங்கினோம்! கடுப்பு! அவளைத் தான் கணக்குப் பண்ணி கவர் செய்ய முடியவில்லை என்று வெறுப்பாகி, டியூஷன் கணக்குகளை அந்தக் கிழிந்த லவ் லெட்டர்கள் மீது கவர் செய்தோம்! யாரும் பார்ப்பதற்குள் விரைந்து டியூஷன்-ற்கு வந்து, அந்தக் காதலை வேறோடுப் பிரிக்க திட்டம் தீட்ட முடிவெடுத்தோம்!

அப்போது தான் தெரிந்தது, நான் எழுதிய தமிழ்க் கவிதையை அவளால் படித்திருக்கக் கூட முடியாத பெங்காலிவாலா அவள் என்று! மேலும் அவளது ஸ்ட்ரிக்ட் டயட்டில் சோற்றுக்கே இடம் இல்லை என்ற அசாத்திய உண்மையும் வேலன்டைன் பரிசு குடுத்து ‘இம்ப்ரெஸ்’ செய்ய நினைத்த என்னையும் ஜீ-யையும் பளார் என்று அறைந்தது! அவள் அவ்வப்போது பேசிய, பாடிய தமிழ் அனைத்தும் கஸின்ஸ் தயவில் தான் என்றும் அறிந்துகொண்டோம்! கொள்ளிக்கட்டை ஏற்றி எறிந்துகொண்டிருந்த பிணத்தில் இடி விழுந்ததுபோல் அடுத்த செய்தி! அவள் இவ்வூரில் வசிப்பவளே இல்லை, விடுமுறைக்காக மட்டும் இங்கே வந்திருக்கிறாள் என்று மாஸ்டர் கூறினார்! கோவிந்தன் ரோடு சர்ச் பக்கம் வந்தோம்! ஏசு மீது ஆணையாக டியூஷன்-ற்கு இனி போவதில்லை என்று உறுதிமொழி எடுத்தோம்! அந்த வருடம் பள்ளி ஆண்டு விடுமுறைக்குப் பின் நாங்கள் பார்க்காதக், கேள்விப்படாத அந்தப் பெண் மீது இருவருக்கும் இருந்த “பப்பி க்ரஷ்” சுகமான நினைவு தான்! பதிமூன்று ஆண்டுகள் ஆகியும் அவளது பிம்பம் அழுத்தமாய் பதிந்திருப்பதும் ஒரு தலை ராகமாய் இன்றும் இசைக்கின்றது!

இன்றுவரை என்னுடன் பயணிக்கப் போகின்றவன் அவன் (ஜீ) என்று அன்று எனக்குத் தெரியாத போதிலும், எங்களுக்குள் தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டு கொலம்பஸ்-ஐ நிராகரிக்கும் அளவு நட்பு ஒன்று ஆரம்பமானது! இம்சையால் நட்பானவர்களுக்கு மத்தியில் “இச்சை”யால் நட்பான வரலாறு எங்களுக்கு உண்டு! ஆனால் இன்றுவரை இருவரும் புத்தனாய் வாழ்வதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. ஒழுக்கத்தில் தலைச்சிறந்து இயல்பாய் புத்தனாக வாழ்வது கடினம். இயலாமை வெளிப்படுத்தும் ஒழுக்கத்தில் புத்தனாய் ஆன நாங்கள் இன்றுவரை தவறேதும் செய்து யார் மனதையும் புண்படுத்தியது இல்லை என்று இவ்வுரையில் குறிப்பிடும் கடமை, எங்கள் நட்பிற்கும், எங்கள் மீது இருக்கும் மரியாதையின் நிமித்தைத்தைக் காப்பற்றிக்கொள்ளும் நலன் கருதுவதிலும் இருக்கிறது!

தொடருவோம்!

– ‘எழுத்தாணி‘ ஆகிய நான்

Related posts

நட்பின் கதைகள் – நட்பு 2

Deepak Krishna

நட்பின் கதைகள் – நட்பு 1

Deepak Krishna

கேபியின் பேபி ‌‌…! | 60 years of Actor Kamal

Kesavan Madumathy

North East Delhi: 13 dead, several injured, schools closed, board exams postponed

Penbugs

Kamal Haasan reveals his current three favourite actors

Penbugs

Kamal Haasan back as host of Bigg Boss 3

Penbugs

Kamal confirms that Tharshan is part of his movie!

Penbugs

Harbhajan Singh to play a college student in his debut as lead

Penbugs

Crane crash at Indian 2 sets; 3 died, few injured

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs