Penbugs
Cinema

வெற்றிமாறன் என்னும் போதை!

என்னுடைய போதைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வெற்றிமாறன் என்னும் போதை.


கருப்பின் அழகும், கவர்ச்சிக் குரலும், வசீகரிக்கும் பேச்சில் கொஞ்சும் புன்னகையுடன் உரக்க உண்மைக்குக் குரல்கொடுக்கும் படைப்பாளி.
தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை, நமது தலைமுறையில் மீட்டெடுத்த ஆளுமை!

வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில், எளிய மனிதர்களின் கதைகளை அவர் சொல்ல முடிவெடுத்தது ஒரு மிகப் பெரிய தொடக்கம்.
பாலு மகேந்திரா அய்யாவால் இயக்குனர் ஆகும் ஆசைக்கு ஈர்க்கப்பட்டு வந்த நான், அவரைப் பற்றித் தொடர்ந்து பேட்டிகளில் பேசிக்கொண்டே இருந்த வெற்றிமாறன் அவர்கள் மீது நாட்டம் கொண்டேன்!

சொல்லப்போனால் வெற்றிமாறன் அவர்களிடம்தான் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று கல்லூரி காலங்களிலேயே உறுதியாகத் தீர்மானித்திருந்தேன்!


அவரிடம் உதவி இயக்குனாராக முயற்சித்துத் தோற்றுப் போனவன் நான்! அவரைத் தொல்லை செய்துகொண்டிருந்த ஒரு இம்சையான கூட்டம் என்று தெரியாமல், நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நின்று, அவரை சந்தித்து திட்டும் வாங்கியிருக்கிறேன்.

அந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அவரிடமே சொல்லவேண்டும் என்ற பல வருட ஆவலைக் குலைக்காமல் எடுத்துச்செல்ல, அதை இங்கு பதிவிடவில்லை!

எனினும் அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் எண்ணற்றவை
“உன் முதல் படம், உன் சர்வைவல்க்கான படம்! அதாவது நீ நிலைத்து நிற்பதற்கான படம்” என்று இளைஞர்களுக்கு வழிகாட்டினார். அவரது பொல்லாதவன் படமே அதற்கு எடுத்துக்காட்டு. தனுஷ் அவர்களின் கமர்ஷியல் உச்சத்தைத் தொட்ட படமாக இருந்தாலும், அதில் அவர் குடும்பங்களையும், இயல்பான அப்பகுதி மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த விதமும், பைக் திருடும் நெட்வர்க்கில் செய்த ஆராய்ச்சியும், பார்வையாளர்களுக்குப் புது அனுபவத்தை அளித்தது.

11-வது படித்துக்கொண்டிருந்த எனக்கோ அது ஒரு சாதாரனப் படத்தைத் தாண்டிய ஒன்று என்று மட்டும் புரிந்திருந்தது. “பாடல்களைத் தூக்கிவிட்டால் ஓரளவு ரியலிஸ்ட்டிக்கான (ஏதார்த்தமான) படமா இருக்குடா”, என்று என் தந்தை எனக்குக் கூறவே வெற்றிமாறன் மீது காதல் பூக்க ஆரம்பித்தது!
ஆடுகளம் ஒரு மதுரைப்பையனை என்ன செய்யும்?? அது எல்லாவற்றையும் எனக்கும் செய்தது. பைத்தியம் பிடிச்சாப்ல தியேட்டர் தியேட்டராத் திறிஞ்சுக்கிருந்தேன்ல!

விசாரணையில் இருந்த உண்மையை, எளிமையை வேறு யாரும் இவரைப் போல் எதார்த்தமாய்க் கையாள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை! விசாரணை அவரது படைப்புகளின் உச்சம் என்றே சொல்லலாம்!

ஜனரஞ்சக விஷயங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், வெகுஜன மக்கள் பார்க்கும் தளத்தில் வெளிவந்து, வெற்றியைக் குவித்து நம்பிக்கையை அளித்தது! தமிழ் சினிமா எதார்த்தத்தை நோக்கி இன்னும் ஒரு படி எடுத்து வைத்தது விசாரணை மூலமாக என்று அழுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வடச்சென்னைப் பற்றி 2007-2008-ல் “காஃபீ வித் அனு” தொலைக்காட்சித் தொடரில் தெரிவித்தபோதில் இருந்தே வரும்-வரும் என்று காத்துக்கொண்டிருந்த எனக்கும், 2010-ல் நான் சந்தித்த என் தம்பி Arun Narain
-க்கும், அந்தப் படம் ஒரு பாடம்! அந்தப் படத்திற்காகக் காத்துக்கொண்டு இருப்பது தவிப்பாகவும் ஏக்கமாகவும் இருந்தது. ஆனால் காத்திருத்தலுக்கெல்லாம் ஒரு காரணம் உண்டு என்று நான் உணர்ந்தேன்! விளைவாக நம்ப முடியாத ஒரு கனவு – தம்பி அருண் நரேன் வடச்சென்னையின் உதவி இயக்குனர் ஆனது தான்!

வெற்றிமாறன் சார்-ஐ ஓரடி மன-தொலைவில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த 2 வருட பரவசமும், இரவு நேர உரையாடல்களும், என் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டது! அருணும் நானும் நட்பானது பாக்கியம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, அது அதையும் தாண்டிய மிகப்பெரிய வரம் என்று புரிந்தது. நன்றி தம்பி.

வெற்றிமாறன் அவர்களின் டீட்டெய்லிங்க்கில் உச்சத்தைத் தொட்ட படம் வடச்சென்னை! குறிப்பாக ஜாக்கி(Jacki) அவர்களின் ஆர்ட் டிப்பார்ட்மென்ட்! மெனக்கெடலின் உச்சம்! நம்மை அந்தந்தக் காலக்கட்டத்திற்கு அழைத்துச்சென்று பூதக்கண்ணாடிப் போட்டுக் காட்டியது என்றே சொல்லவேண்டும்! நான் 12 மூறை தியேட்டரில் பார்த்த ஒரே படம்!
“ஓரு மீடியம்ல இருக்கற எஸ்ஸென்ஸ், இன்னொரு மீடியம்க்கு அப்டியே ட்ரான்ஸ்லேட் ஆகாது” – நாவல் தளத்தில் இருக்கும் சாரம், திரைப்படத்தில் அப்படியே இருக்காது. தளங்கள் வேறு என்பதால் அந்தந்தத் தளத்திற்கு தான் ஞாயம் சேர்க்கவேண்டும் என்று உறுதியாக உணர்த்தினார். படம் எடுக்க வந்துவிட்டால் படத்திற்கு தான் ஞாயம் செய்யவேண்டும் என்றும் நாவலைப் படமாக்குவதிலேயே நாவலுக்கு ஞாயம் செய்தாகிவிட்டது என்றும் புரியவைத்தார்!

விளைவு அசுரன் படத்தின் அபார வெற்றியை இந்தியாவே கொண்டாடியது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஜனரஞ்சகப் படமாக்கி, அதிகாரவர்க்கத்திற்கு மீண்டும் கேள்வி எழுப்பினார் வெற்றி. அதுவே வெற்றி அவர்களின் வெற்றி!
எதார்த்த சினிமாவிற்கும் – பொழுதுபோக்கு சினிமாவிற்குமான தூரத்தைக் குறைத்துக்கொண்டே வரும் பாலமாகத் தான், நான் எங்கள் வெற்றிமாறன் சார்-ஐப் பார்க்கிறேன்!

சார் – உங்கள் படம் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகள் மட்டுமல்ல, உலக அரங்கில் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்
ஒரு இயக்குனர் இவ்வளவு உண்மையாகவும் தன்னடக்க வெளிப்பாட்டுடனும் இருக்க முடியுமா? அடைந்த உயரத்திற்கு தரையில் இருப்பதே கடினம்! தரைக்கும் அடியில் இறங்கி நின்றுகொண்டு அமைதி காத்து இயங்கும் நிதானி.

இவர்தான் எங்கள் வெற்றிமாறன்.

சொல்லுவது மட்டுமல்லாமல் களத்திலும் இறங்கி (போராட்டங்கள், இயற்கை விவசாயம் உட்பட) வழிகாட்டும் ஆசான்!

இறுதியாக அவர் பட வசனத்தைச் சொல்லி முடித்துக்கொள்க்கிறேன்!
“அவர் களத்துல ஜாக்கியா எறங்கி ஒரு ஆட்டத்துல கூட தோத்ததில்ல” – எழுத்துக்கு மட்டுமல்ல, அதன் பொருளுக்கும் சொந்தக்காரர் வெற்றிமாறன் சார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்!

Leave a Comment