குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, அம்மாநில முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் வழி மேல்நிலைப்பள்ளியை, திடீரென அம்மாநில அரசு மூடியது. மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அப்பள்ளி மூடப்பட்டதாக குஜராத் அரசு விளக்கமளித்தது.
இந்தநிலையில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், குஜராத் அரசின் முடிவால் தமிழ் மாணவர்கள் கல்வியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அப்பள்ளிக்கான பராமரிப்பு செலவுகளை ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டினை பெற்று வருகிறது.
