தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் செல்வம். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தான் உயிருடன் இருக்கும்போது தனது முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் செல்வம். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.
செல்வம் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் அவர் இல்லாதது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது.
சமீபத்தில் செல்வத்தின் செல்ல மகளான லட்சுமி பிரபாவுக்கும், கிஷோர் என்ற மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் லட்சுமி பிரபா, மறைந்த அப்பா தனது திருமணத்தில் இல்லாததை நினைத்து தொடர்ந்து வருந்தி வந்தார்.
இதனையறிந்த லண்டனில் மருத்துவராக பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி, தங்கையின் வருத்ததை போக்கும் வகையில் தனது கணவர் உதவியுடன் இறந்த செல்வத்தின் உருவத்தை சிலையாக உருவாக்க முடிவு செய்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிலையை வடிவமைத்தனர். ரூ.6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் இந்த சிலை உருவானது.
பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த தங்கை லெட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின்போது மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவ சிலையை புவனேஸ்வரி திடீரென்று மேடைக்கு கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தந்தையின் சிலையை பார்த்த லெட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலைக்கு அருகே தாயை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். இந்த சம்பவம் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
MS Dhoni was a special man in the run chase: Michael Holding