Penbugs
CinemaInspiring

வாலிப கவிஞர் வாலி…!

தமிழ் சினிமாவில் என்றும் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அதில் கால மாற்றம் , கலாச்சார மாற்றம் , கதை மாற்றம் என அந்த அந்த காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மெருகேற்றம் (அப்டேட் ) செய்து கொள்ளாதவர்களை இந்த உலகம் கண்டு கொள்வதில்லை.

தன்னை காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளாமல் தோற்றவர்கள் இங்கே அதிகம் ஆனால் ஒரு‌‌ மனிதன் ஒரு துறையில் ஒன்றல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல 55 ஆண்டுகள் தன்னை தினம்தோறும் காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டே தன்னுடைய சிம்மாசனத்தில் இறுதிவரை வாலிபனாகவே வாழ்ந்தார் என்றால் அது வாலிப கவிஞர் வாலி மட்டுமே.

வாலி சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதிய பாடல், “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்“. இந்தப் பாடலில் மனதை பறிகொடுத்துதான் வாலியை சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வரச் சொன்னார் டி.எம்.எஸ்.

1958ல் பாடல் எழுத வந்தாலும் 1963ல் வெளிவந்த கற்பகம் படம்தான் வாலி அவர்களின் முதல் பிரேக். விஸ்வநாதன் இசையில் வந்த அந்த ஆல்பத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் , குறிப்பாக மன்னவனே அழலமா , அத்தையடி மெத்தையடி பாடல்கள் வாலியை நோக்கி தமிழ் சினிமாவை திருப்பின.

(மன்னவனே அழலாமா பாடலில் )

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு…!

அந்த படத்தின் ஒட்டு மொத்த கதையையும் இந்த பாடலில் வர வைத்தார் வாலி‌.

வாலி – எம்ஜிஆர் கூட்டணி தமிழக அரசியல் வரலாற்றையும் , சினிமா வரலாற்றையும் மாற்றி அமைத்த கூட்டணி. வாலியின் பாடல்களால் எம்ஜிஆர் புகழ் பெற்றாரா இல்லை எம்ஜிஆரால் வாலி புகழ் பெற்றாரா என கணிக்க முடியாதது என்பதுதான் அவர்களின் வெற்றி .

ஒவ்வொரு பாட்டிலும் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கு விதை போட்டு கொண்டே வந்தவர் வாலி , வெறும் ஒன்று இரண்டு பாடல்களை குறிக்க இயலாத அளவிற்கு இவர்களின் கூட்டணி மெகா ஹிட் அடித்த கூட்டணி.அவர்கள் கூட்டணியில் வந்த எனக்கு பிடித்த சில பாடல்கள் இங்கே ;

கொடுத்தது எல்லாம் கொடுத்தான் (படகோட்டி)

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை..!

வாங்கய்யா வாத்தியார் அய்யா (நம்நாடு)
(அப்பொழுது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார் )

சூரியன் உதிச்சதுங்க
இங்க காரிருள் மறைந்ததுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா போகுமுங்க …!

புத்தன் ஏசு காந்தி பிறந்தது (சந்திரோதயம்)

நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்…!

தைரியமாக சொல்லு நீ மனிதன்தானா (ஒளி விளக்கு)

பொருள் வேண்டி திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்…!

இதை தவிர எண்ணற்ற பல பாடல்களும் உள்ளது . எம்ஜிஆருக்கு எழுதிய அதே சமயத்தில் சிவாஜிக்கும் சரிசமமாக பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் வாலி‌.

மாதவி பொன்மயிலால் (இரு மலர்கள்)

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
மானின் இனம் கொடுத்த விழியாட….!

அண்ணா அவர்கள் இறுதியாக பார்த்த படம் எதிர் நீச்சல் அந்த படத்தின் துவக்கத்தில் வரும் வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் பாடலை கேட்டு அண்ணா வெகுவாக வாலியை பாராட்டினாராம்.அந்த எதிர்நீச்சலிலும் பாடல் எழுதி இந்த கால எதிர்நீச்சலுக்கும் பாடல் எழுதியது வாலிப வாலியின் தனிப்பெருஞ் சாதனை .

வாலியின் மிக முக்கியமான பாடலாக நான் கருதுவது அல்லா அல்லா பாடல்

உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளி வாசல்…!

சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன பாடல் ;

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…..!

இந்த பாடல்களை எல்லாம் கடந்து வாலி அடுத்த தலைமுறையான இளையராஜாவிற்கு வருகிறார் . ராஜாவுக்கும் வாலிக்குமான நட்பு ரொம்ப நெருக்கமானது ‌.

மௌன ராகம் , தளபதி , இதயம் , மன்னன் , ஆபூர்வ சகோதரர்கள் , நான் கடவுள் ,தேவர் மகன், மறுபடியும் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெறும் வேஷேமே …!

உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே…!

அம்மா என்றழைக்கால உயிரில்லையே , சுந்தரி கண்ணால் ஒரு சேதி ,பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா , கல்யாண தேன் நிலா ,உன்னை நினைச்சேன் ,மகாநதி என அடுக்கி கொண்டே போகலாம்.

(தந்தையின் அழுகுரலாக மகாநதியின் பாடல் )

தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண் மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலிருந்து வீழ்வதில்லையடி…!

கங்கை அமரனின் வாழ்வே மாயத்தில்

யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது?

அந்த காலகட்டத்தில் வந்த சின்ன ராசாவே சிற்று எறும்பு என்னை கடிக்குது,
ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓ பியூட்டின்னா பியூட்டி தான் , சர்க்கரை வல்லி சமைஞ்சது
எப்படி என்ற பாடல்கள் எழுதி தனது இளமையை வரிகளில் ஏற்றினார் வாலி .

சர்க்கரைவல்லி சமைஞ்சது பாடலில்

அட காய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற…..!

வாலிப வாலினு சொல்றதுக்கு முக்கிய காரணம் ராஜாவிற்கு பிறகான அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் அவர் பாடல் வழங்கிய விதம் .தேவாவை தொடங்கி இறுதியில் வந்த அனிருத் வரை அவர் பாடல் எழுதி அந்த பாடல்களும் ஹிட்டாக்கின‌.

தேவா இசையமைத்த முதல் படத்தில் இருந்து அவரை நீக்க தயாரிப்பாளர்கள் முயற்சித்த போது அவர் போட்ட டியூனுக்கு ஆரம்பம் நல்லாருக்கு என்று வரியை போட்டு அவருக்கு புதிய வாழ்வை தொடங்க அடித்தளம் போட்டவர் வாலி .

அடுத்து இசைப்புயலுடன் கைகோர்த்த வாலி அதுவும் ரகுமான் – வாலி கூட்டணியில் “ம ” வரிசை பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்.

முக்காலா முக்காபுல்லா ,மாயா மச்சிந்திரா , முஸ்தபா முஸ்தபா , முன்பே வா என அனைத்து பாடல்களும் காலம் தாண்டி பேசிக் கொண்டிருக்கும் பாடல்கள்.

இயக்குநர் கதிர் – வாலி இணை பல ஹிட் பாடல்களுக்கு காரணமானது.முஸ்தபா முஸ்தபா பாடலை அடித்துகொள்ள இன்று வரை ஒரு பாடலும் இல்லை என்பது வாலிக்கும் ,கதிருக்கும் , ரகுமானுக்கும் கிடைத்த பெரிய பரிசு.அந்த பாட்டில் இருந்து

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி…!

வாலி வரிகளை எழுதி பின் ரகுமான் மெட்டமைத்த பாடல் நியூயார்க் நகரம் .

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா….!

ரகுமானுக்கு அடுத்த தலைமுறையான‌ யுவன் , வித்யாசாகர் , சிற்பி என பட்டியல் நீணடு கொண்டே போகும் .

தீனா படத்தில்,

காதல் இருக்கும் பயத்தினில்தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன்தான் அலைவான் வீதியிலே‌….!

2000த்தின் தொடக்கத்தில் கணிணிகளை பற்றி பாட்டில் சொல்வது லாம் அவர் எந்த அளவிற்கு தன்னை அப்டேட்டாக வைத்து கொண்டார் என்பதை காட்டுகிறது. காதல் வெப்சைட் பாடலில்

ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக..!

எங்க ஏரியா உள்ளே வராதே என படத்திற்கு பாடல் எழுதும்போது இந்த டைட்டிலை முதலில் மாத்துயா எவனும் தியேட்டருக்கு வராம போயிருவான் என்று சொல்லி சென்னை 28 என மாற்றியவர் வாலி ‌.அந்த படத்தில்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன்தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா ….!

கோவா படத்தில்

கோ என்பது முன் வார்த்தை தான் வா என்பது பின் வார்த்தை தான்…!

மங்காத்தா படத்தில்

நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு
நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்….!

வெங்கட்பிரபுவின் முதல் ஹிட் சென்னை 28 கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்த படம் அதற்காக இந்த வரி.

பிரியாணி படத்தில் மிஸ்ஸிப்பி பாடல்

ஏய் நீ சிக்கு புக்கு
நான் உன்ன படிக்கபோறன்
நீ செக்கு புக்கு நான் உன்ன கிழிக்கப்போறன் ….!

இந்த அளவிற்கு இளமை ததும்பும் பாடல்களை எழுதியபோது வாலியின் வயது 75 ஐ கடந்து போனது.

சிம்புவிற்கு வெவ்வேறு கால கட்டத்தில்

ஹே நான் சொன்னா நம்பு
உன் நண்பன் தானே சிம்பு …!

தப்புச் செய்யும் படவா
உனைத் தப்பிச் செல்ல விடவா
ஒட்டிக் கொள்வேன் ஒண்ணாய்
இனி உதறாதேடா கண்ணா…!

உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்
உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்….!

வாலியின் பெரிய பிளஸ் தினசரி நடக்கும் நிகழ்வுகளை தனது மனதில் வைத்து அதற்கு ஏற்றவாறு பாடல்களில் அதை போகிற போக்கில் கூறி விடுவார்.

ஒஸ்தி படத்தில்

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேர்தான் மெல்லுவான்.
எவனும் ஏறாலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீறிடுவா ஹிஸுனு.

மல்லிகா ஷெராவத் நடித்த படம் ஹிஸ் அதனையும் பாட்டில் கொண்டு வருவதுலாம் வாலிக்கே உரித்தான ஸ்டைல் .

அம்மா பாடல்களையும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளார் வாலி .

தாயில்லாமல் நானில்லை ,
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே, நானாக நானில்லை தாயே ,சின்னத்தாயவள் தந்த ராசாவே , காலையில் தினமும் கண்விழித்தால், ஆசைப்பட்ட எல்லாத்தையும் என அம்மாவுக்கு
என்று பாடல்களை தந்துள்ளார் வாலி.

பாடல்கள் இரட்டை அர்த்தத்தில் எழுதுவது சரியா என்ற கேள்விக்கு வாலி கூறியது நான் துட்டுக்கு பாட்டு எழுதறேன் இங்கே டைரக்டர் , மியூசிக் டைரக்டர் திருப்திக்கு தான் நான் எழுத முடியும் இங்க போய் என்னுடைய சொந்த கருத்தினை திணிக்க முடியாது இது ஒரு கூட்டு முயற்சி படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று தெளிவுப்படுத்தி இருப்பார் வாலி.

வாலியின் பெரிய குணம் பாராட்டுவது அதுவும் அவை விமர்சிக்கப்படும் அளவிற்கு பாராட்டுவார் .கண்ணதாசன் முதல் முத்துகுமார் வரை அவருக்கு எதிரில் யார் கடை விரித்தாலும் எதிரியாக நினைக்காமல் அவர்களையும் பாராட்டி கொண்டு இருந்தார் .

இதுவரை வெளிநாட்டுக்கே செல்லாமல் இருந்தாலும் தனது பாட்டில் உலகின் அனைத்து நடப்புகளையும் அழகாக சேர்த்து கூறுவதுதான் வாலியின் முத்திரை ‌…..!

கோவலன் கதையை இரண்டே வ‌ரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் சொன்னதாக வந்த தகவல் ;

புகா‌ரில் பிறந்தான்
புகா‌ரில் இறந்தான்….!

எம்எஸ்வி முதல் அனிருத் வரை
கண்ணதாசன் முதல் முத்துகுமார் வரை
எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை
கேபி முதல் துரை செந்தில்குமார் வரை
டிஎம்எஸ் முதல் ஹிப்ஹாப் ஆதி வரை
ஏவிஎம் முதல் வொன்டர்பார் வரை

தமிழ் சினிமாவின் அனைத்து காலகட்டங்களிலும் தன்னுடைய இளமையான வரிகளோடு நம்மை ஆட்கொண்ட வாலிப கவிஞர் வாலியின் நினைவுநாள் இன்று….!

Related posts

அபூர்வ ராகம் | பத்ம விபூசண் ஜேசுதாஸ்..!

Kesavan Madumathy

When Rajinikanth wanted to do the role of ‘Bharathiyar’

Penbugs

Leave a Comment